Friday, 27 June 2014

சே குவேரா

திரைப்படங்கள்...
எங்களின் திசைகளைத்
தீர்மானித்துக் கொண்டிருந்தபோதுதான்..
நீ எனக்கு அறிமுகமானாய்...

சே குவேரா

ஒரு புத்தகத்தின் வாயிலாக.
மரணத்த்திற்கு அப்பாலும்...
வாசிக்கப்படும் மௌன கீதையே...

அன்றுதான்
நான் விடுபடத் துவங்கினேன்
நிழல்களின் கவர்ச்சியிலிருந்து...

பிரம்பு எடுக்காத ஆசானாய்..
உன் அதீதக் கவர்ச்சிப் புன்னகையோடு...
நீ கற்றுத் தரத் துவங்கினாய்...
எனக்கு
இந்தப் பேதை சமூகத்தின் மீதான
மகத்தான காதலை...

வரலாற்றின் அதிசய மானுடனாய்,
ஒரு இதிகாசத் தொன்மத்தின்
இணையற்ற நாயகனைப் போல்
நிலை பெற்றுவிட்டது....
உனது பிம்பம்...
என் மனக் கதவுகளில்...

உனது...
"ஒரு மோட்டார் சைக்கிள் டயரி"களில்...
நீ எழுதிய உனது தென் அமெரிக்கப் பயணங்கள்...
நீ ஆயுதம் ஏந்திய பாரதியாய் வலம்வர
அடித்தளமிட்டதை உரக்கச் சொன்னது..

உனது தீ வார்த்தைகளைத் தீண்டுகிறேன்...
இதயத்தினால்.


""உரிமைகளுக்காகப் போராடுபவன்...
கொஞ்சம் கிறுக்கனாய்
நடந்தது நடக்கப்போவது
எதுகுறித்தும் அஞ்சாதவனாய் இருப்பான்"-

என்ற உன் வார்த்தை எப்போதும் வேதம்தானே..

ஏகாதிபத்தியத்தை
சகமனிதர்களின் அடிமை விலங்குகளை
எந்த நாடாயிருந்தாலும்
எதிர்த்துப் போரிட
தணியாத தாகம் இருந்தது உன்னிடம்...
எந்தக் கிளையில் திரியும் புழுவானாலும்
எல்லாக் காற்றிலும் பறந்து திரியும்
வண்ணத்துப் பூச்சிகளாய் அவை மாறும்.....

தீராத வேட்கை உன் கனவானது.
புரட்சி என்பது வெற்று சாகசமல்ல உனக்கு...
உன் வாழ்வின் நெறி....
அதனால்தான்
உன்னால் மரணத்தையும்
வந்து போகும் தூக்கமாய்
எதிர் கொள்ள முடிந்தது...

இன்றும் வாழ்வின்
எல்லா மரணங்களும்
கல்லறைகளுக்குள் மூடிக் கொண்டுவிட..
உனது மகத்தான வாழ்க்கை மட்டும்
வாசிக்கப் படுகிறது...
ஒரு வேதமாய்...
வேதாகமமாய்...

No comments:

Post a Comment