Friday, 27 June 2014

ஒரு தேசியக்கொடியும் சில கட்சிக்கொடிகளும்...!!!

ஒரு தேசியக்கொடியும் சில கட்சிக்கொடிகளும்...!!!

சாதிகளும் மதங்களும்
கொலைக்கான
சுதந்திரத்தைக் கோருகின்றன..!

குடிதண்ணீர் கிடைக்காத
ஊர்களுக்கு மத்தியில்
மது
நதியாகி ஓடுகிறது..!

வங்கிக் கையிருப்பின்
அளவைப் பொறுத்து
மாறுபடுகிறது
பேரன்பும் பெருங்காதலும்..!

உழைப்புக்கு ஊதியம்
மறுக்கப்படும் உலகில்
களவுகள்
தங்களுக்கான சுதந்திரத்தை
தாங்களே..
கொண்டாடித் தீர்க்கின்றன..!

வரம்பு மீறிய
வன்முறையின் சுதந்திரத்தை
போர்கள் என்கிற
புனைப்பெயரில்
வரலாறு நெடுகிலும்
வாசிக்க முடிகிறது..!

எப்போதும் ஏழைகளுக்கு
எட்டாத உயரத்தில்
கட்சிக்கொடிகள்
காற்றில் படபடக்கின்றன..!

கொடிகளை..
மாற்றி ஏற்றுவதால்
கொண்டாடப்படுவதில்லை
சுதந்திர தினம்..!
கொள்கைகள் எப்போதும்
அரைக்கம்பத்தில் பறக்கின்றன..!

#கௌதம்இளங்கோ

No comments:

Post a Comment