Friday, 27 June 2014

என் ஆசான் பாரதி இன்று இருந்திருந்தால்.....??????

என் ஆசான் பாரதி இன்று இருந்திருந்தால்.....??????

நான் கண்ட பாரதம்
நசுங்கி கிடக்க
நெஞ்சில் சுமையோடு
வீதி வழி வந்தேன்
சுதந்திர இந்தியாவை
வளம் பெற்ற இந்தியாவை
காணவந்த கருவிழியில்
ஊழல் பிசாசையும்
ஒழுக்கமற்ற அரசியல்வாதிகளையும்
ஒற்றுமை இல்லா மக்களையும்
காண்கையில், விழி இருந்தும் பயனில்லை பாரத மாதா!
தெருவெல்லாம் மரம் வாழ
அதை அண்டி மக்கள் வாழ
சிட்டு குருவி தினம் சிரித்த வீதி
வான் உயர கட்டிடங்கள் நிரப்புகையில்
மயானம் போல காட்சி அளிக்குதடி!
மக்களின், எம்மக்களின் நிலைகண்டு
என் ஆவியே தூக்கில் தொங்க துடிக்குதடி!!!!!!!!

கெளதம் இளங்கோ

என்னை பெற்றவளே

கருவில் சுமந்து உயிராய் காத்து, உயிர் தந்தவளே.,
தொப்புள் கொடி பிரிந்ததால் என்னவோ, நம் பாச கொடி இணைந்தது.,
நிலா சோறு ஊட்டி, தாலாட்டு தந்தவள் நீ தானே.,
அகரம் தந்து, அன்பு காட்டியவளும் நீ தானே.,
என் தவறுகளை கண்டித்தவளும் நீ தான், தண்டித்தவளும்... நீ தான்., 

அறியாமையால் செய்த தவறுகளை மன்னித்துவிடு,
மனதார எதுவும் செய்யவில்லை.,
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பார்கள்
என்னை பொருத்தவரை உன்னை விட சிறந்த தெய்வம் இல்லை!!!
" அம்மா "

நீ எனக்காக உழைத்து போதும் ஓய்வு எடு தாயே உய்யாரமாக
உன்னக்க உழைக்க நான் இருக்கிறேன்.
அன்னையே மீண்டும் உந்தன் மகனாக பிறக்க இறைவனை வேண்டுகிறேன்!!!
அன்னையர் தின வாழ்த்துக்களுடன் உன்னை வணங்குகிறேன்.

என்றும் உன் கைப்பிடித்த குழந்தையாய்
கௌதம் இளங்கோ...!

நண்பர்கள் இல்லா உலகம்

கண்ணீரை சந்திக்கிறேன் முதன்முறையாக
நீ இல்லாதபோது...
தனிமையில் தான் வாழ்கிறேன் -நீ
இல்லாத ஊரில் ...
மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள
நண்பனே நீ இல்லை அதனால்
மகிழ்ச்சியை நான் உணர்வதே இல்லை!

அனைத்தையும் கற்றுத்தந்த நீ
நீ கற்றுக்
கொடுக்கவில்லையடா
உன்னை பிரிந்து வாழ ...

என் கரங்களாக இருந்தாய் -நீ
இல்லாத பொழுதிலே என் கண்கள்
உன் பிரிவிலே கண்ணீர் சிந்துதடா!

என் கண்கள் கலங்கினால்
உன் உதிரம் கொதிக்குமடா
இன்று உன்னை பிரிந்து வாழ்கிறேன்
கண்ணீரோடு அதை துடைக்க உன் கைகள்
வருவாயா........?

சுதந்திரம் கெடச்சாச்சு

இருட்டாகத்தான் இருந்தது
அன்றைய இரவும்,
ஆங்காங்கே சில மூணு முணுப்புகள் "உண்மையாகவே கிடைத்து விட்டதா?
ஆம்,
சிலர் சொல்லி அனுப்பியதாக சொல்லின சில கதர் சட்டைகள்.
நம்பிக்கை இன்றி காத்துக்கிடந்தோம்.
இரவின் மைய இருள் நகர்ந்த பின் ஆதிகாரப் பூர்வ தகவல் வந்தது சிலர் மூலம்,
சொல்லில் அடங்கா மகிழ்வுடன் குதுகளித்தோம்

"சுதந்திரம் கிடைத்து விட்டது என்று"

இதை ஆண்டுக்கு இரு முறை சொல்லி இனிப்பு தரும் தாத்தா.
இப்போதெல்லாம் இதை தாத்தா சொல்வதே இல்லை
.தான் தியாகி என்பதை நிரூபிக்க கூட 500 செலவானதில் இருந்து........


என் பிரிய தோழமைகளே..! ஆகஸ்டு 15 சுதந்திர தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்
வாழ்க பாரதம்!
வந்தேமாதரம்.
ஊழல் ஒழிய இன்றாவது சூளுரைப்போம்
ஊழலில்லா இந்தியா அமைய பாடுபடுவோம்

பசங்க இப்படிதான் ....


எங்களுக்கு ஒரு சில பொண்ணுங்ககிட்ட
பிடிக்காத ஒரு விஷயம் இருக்கு..

டெல்லி கற்பழிப்பு கேஸ்ல மாட்டினவனையும்.,
ரோட்ல அழகா ஒரு பொண்ணு போறப்ப
திரும்பி பார்க்கறவனையும் ஒரே தட்டுல
வெச்சி பேசுவாங்க..

நாயே., பேயே, பொறுக்கியேன்னு கவிதை,
கட்டுரை எல்லாம் எழுதி திட்டுவாங்க..

" ஒட்டு மொத்த பெண் இனத்தின் குரலாய்
ஒலிக்கிறது "-னு கமெண்ட் போட வேற
கெளம்பிருவாங்க நாலு பொண்ணுங்க..

இல்ல நாங்க தெரியாமத்தான் கேக்கறோம்..
உங்களுக்கு என்னதாம்மா பிரச்னை...??

நீங்க பியூட்டி பார்லர் போவீங்க.,
இல்ல வீட்லயே ஒரு மணி நேரம்
கண்ணாடி முன்னே நிப்பீங்க..
அழகழகா டிரஸ் வாங்கி போட்டுப்பீங்க..
ரோட்ல ஸ்டைலா நடந்து போவீங்க..

அட இந்த பொண்ணு அழகா இருக்கேன்னு
( உங்களை இல்ல.. உங்க கூட வர்ற பொண்ணை ) நம்ம பையன் திரும்பி பாத்துட்டா போதும்..
உடனே " பொறுக்கி, நாயேன்னு " திட்டுவீங்க..

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா..?

அவன் ரோட்ல புதுசா ஒரு பைக் போனாலோ.,
வோக்ஸ்வேகன் கார் போனாலோ கூடத்தான்
திரும்பி பார்ப்பான்..
ஏன்னா நாம எல்லோரும் அழகா இருக்கறதை
ரசிக்கிற மனதோட தான் இருக்கோம்..

ஒரு குழந்தை சிரிச்சா ரசிக்கிறோம்..
ஒரு அழகான பூவை பாத்தா ரசிக்கிறோம்..
ஒரு மயிலை பாத்தா ரசிக்கிறோம்..
ஒரு நாய்குட்டியை கூட ரசிக்கிறோம்..
ஆனா அழகான பொண்ணுங்கள பாக்கும் போது
மட்டும் பசங்க ஜென் மனநிலைக்கு போயிடணுமா..?

அவன் பேசினா ஜொள்ளு.,
நீங்க பேசினால் ப்ரெண்ட்லி.,
அவன் கைய பிடிச்சா பொறுக்கி
நீங்க கைய பிடிச்சா பீலிங்..

இது உங்களுக்கே ஓவரா இல்ல..

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...
எங்களுக்கு தெரிஞ்ச வரை நிஜமாலுமே அழகா
இருக்குற எந்த பொண்ணும் பசங்க மேல
இப்படி இவ்ளோ கம்ப்ளெயிண்ட் சொல்றதில்ல..

( ஆண்கள் எல்லோருமே பொறுக்கிகள் என
நினைத்துக்கொண்டிருக்கும் சில லூசுகளுக்கு மட்டும்

அம்மாவின் ஞாயிற்றுக்கிழமை!

சனிக்கிழமை மாலையே 
துவங்கிவிடுகிறது 
ஞாயிற்றுக்கிழமை விடுமுறையின் குதூகலம்
பள்ளி செல்கிற குழந்தைகளுக்கு 

ஞாயிறு காலை செய்தித்தாள் இணைப்புகளுடன்
ஒன்றிவிடுகின்றார்
ஓய்வு பெற்ற தாத்தா

தொலைக்காட்சியின்
ஆட்டம் பாட்டங்களில்
ஆரவாரிக்கின்றனர்
அக்காவும் தங்கையும்

சூரியன் சுட்டெரிக்கத் துவங்கும் வரை
தூக்கத்தில் கிடக்கின்றனர்
அண்ணன்கள்

அசைவ உணவுத் தயாரிப்புக்காக
மார்க்கெட்டில் இருந்து திரும்புகின்றனர்
அப்பாவும் சித்தப்பாக்களும்
மெலிதான டாஸ்மாக் வாசனையுடன்

அவரவர் ஞாயிற்றுக்கிழமை
அவரவர் விருப்பம்போல

ஆனால்
அன்றாடம்போலவே
அடுப்படியில் தொடங்கி
அங்கேயே முடிகிறது என்
அம்மாவின் ஞாயிற்றுக்கிழமை!

தித்திக்கும் பொங்கல்


அதிகாலை வேளையில் கதிரவன் வருகை கண்டு
இல்லத்தின் முற்றத்தில் வண்ணக்கோலமிட்டு

சாணம் கொண்டு அறுகம்புல்லில் பிள்ளையாரும் பிடித்து
கிழக்கே பார்க்க குத்துவிளக்கும் ஏற்றி

வெத்திலையும் பாக்கும் சந்தனமும் ஊதிபக்தியும்,
சாம்பிராணியும் ஊரெங்கும் மணக்க
கரும்பும் வாழைப்பழங்களும்
இனிப்பு பலகாரமும் ஒரு பககம் இருக்க

மூன்று கல்வைத்து அதில் விறகு வைத்து கற்பூரம் கொண்டு
தீ மூட்டி இறை வழிபாட்டுடன் புதுப்பானை அதிலிட்டு

அரிசியை அள்ளி ஆதவனை வணங்கியே
அப்பத்தாவைத்தொடர்ந்து
அனைவரும் பானையிலிட்டு
தேனும் சர்க்கரையும் பாலும் சேர்த்து

தித்திக்கும் பொங்கல் செய்து
ஞாயிறுக்குப் படைத்து
அயலவர் உற்றார் உறவினர்கள்
நண்பர்கள் என்று கூடி
கொடுத்துப்பரிமாறி

மகிழ்ச்சிவெள்ளத்தில் மகிழ்ந்த அத்திருநாள்.

நினைக்கையில் நெஞ்சம் கொஞ்சம் வேதனை தருகிறது
எங்களின் நிலையற்ற வாழ்வால் நித்தமும் மனதில் சோகம் பொங்கும் நிலை...

கெளதம் இளங்கோ

என் தனிமை !

"என் தனிமை"

என் வாழ்வில் என்னால்
கையெழுத்திடப் படாத
பல பக்கங்களை 
ரகசியமாய் திருடி
கைப்பற்றிக்கொண்டது
தனிமை ..

என்
ஒவ்வொரு நாளும்
ஒத்திகை பார்க்க முன்னே
ஒட்டிக்கொள்கிறது
தனிமை ..

அதே காலை
அதே மாலை
அதே உத்தியோகம்
அதே நண்பர்கள்
அத்துடன்
அதே தனிமை ..

இரவெல்லாம்
தனிமை தரும் எத்தனையோ
வினாக்களுக்கு
விடைதெரியாமலே
விடிந்து விடுகிறது ..

பகலெல்லாம்
தனிமையை எண்ணி
தவமிருந்து
பொழுதெல்லாம்
கரைந்து விடுகிறது ..

காலம் பதில் சொல்லும் என்பர்
என்
தனிமைக்கு மட்டும்
காலத்திடம்
பதில் இல்லையா என்ன ?

தனிமை
தன் கையிலிருக்கும்
தூரிகையினால்
என்னில் சில
சித்திரங்கள் வரைந்ததும்
உண்மை ..

தனிமை
உதிரும் கண்ணீரை
உலர வைத்து
வெள்ளைக்காகிதத்தில்
வர்ணம் பூசிக்கொண்டதும்
உண்மை ..

நிகழ் காலம்
தனிமையினால்
புறக்கணிக்கப்படும் போது
எதிர்காலத்திற்காய்
நான் காத்திருப்பதும்
உண்மை ..

கண்ணீரை -தண்ணீராய்
கருதி
நீச்சல் போடும்
தனிமையினால் ..
எதிர் நீச்சல் கூட
தெரியாமல் நான்
தாக்கப்படுவதும்
உண்மை ..

என்னை நானே
நொந்து கொள்ளுமளவு
தரிசிக்க முடியாத
தவிப்புகள் தந்ததும்
உண்மை ..

வலுக்கட்டாயமாக
வணக்கவைத்து
என்னை வாட்டி
வதைக்கிறதே
தனிமை ..

தினமும்
என் இதயக் கூட்டினுள்
சோக ராகத்தில்
யாழிசை மீட்டுகிறது
என் தனிமை !

கெளதம் இளங்கோ

நான் ஒரு பொறியாளர்

என்னால் ஒரு நிமிடத்திற்கு 70 வார்த்தைகள் எழுத முடியும் 
அனால் என்னுடைய கையெழுத்தை படிப்பது எனக்கு கஷ்டம்....

நான் என் குடும்பத்தோடு செலவிட்ட நேரங்களை விட எனது ஆசிரியர்களுடன் செலவிட்ட நேரங்களே அதிகம்...

எனக்கு Euler’s Theorem தெரியும் அனால் நான் போடும் சட்டையின் அளவு தெரியாது....

எனக்கு வாழ்கையை வாழ தெரியாது அனால் அதை கணக்கியல் முறைப்படி நிரூபித்து காட்ட முடியும்...

எனக்கு ஆங்கிலத்தை அப்படியே Binary ஆக மாற்ற தெரியும் அனால் பரிட்ச்சையில் 40 மதிப்பெண் என்பது எனக்கு பகல் கனவாகவே உள்ளது...

நான் செலவு செய்யும் பணத்தை விட எனது xerox பில் அதிகமாக இருக்கும் ....

ஆம்...!
நான் ஒரு பொறியாளர்...!

4 வருடம்
40+ பாடங்கள்
400+ செய்முறை தேர்வு
4000+ கோப்புகள்
40000+ மணி நேரங்கள்

ஒரு சாதாரண மனிதனால் இதை செய்திட முடியாது...

இருந்தாலும் நாங்கள் கூடுதல் சக்தி உள்ளவர்கள்

ஏனெனில் நங்கள் "பொறியாளர்கள்"

நான் ஒரு பொறியாளர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அப்பா 
நில்லாது பொழியும் அன்பிலாகட்டும் 
செல்லாது நிலைத்த பண்பிலாகட்டும் 
நிரந்தரமானவர் நீர்

அகரம் சொல்லித் தந்த போதும்
சிகரம் ஏறி நின்ற போதும்
மாறாதவர் நீர்

வம்புக்கும் அன்புதான் மருந்து
அதுவே உறவினில் விருந்து
எனும் அறிவு தந்தவர் நீர்

ஓடி விளையாடவும், ஓய்ந்திருக்கலாகாது எனவும்
பாரதி சொன்னபோதும் கேட்டதில்லை நான்
கண்டதுண்டு உங்களிடம், கண்டதை இன்றும்
கடைபிடிக்க நீங்களே காரணம்

இதிகாசமும், புராணமும் கற்றுத் தந்தீர்
இருளிலும் இயல்பாக இருக்க கற்றுத் தந்தீர்
துன்ப மேகம் சூழும் போதும் அதில் வீழாது இருக்க கற்றுத் தந்தீர்
இன்ப வெள்ளம் ஆழும் போதும் அதிலே சாயாது இருக்க கற்றுத் தந்தீர்

கண்டதும், கேட்டதும், குறைவில்லாது கற்றுத் தந்தீர்
வாழும் முறைகள், நிறைவாகவே கற்றுத் தந்தீர்

இன்னமும் உங்களிடம் கற்க உண்டு ஏராளம்
கற்கையில் நீங்கள் தரும் விவரம் தாராளம்

உங்கள் மகன் என மனதாரச் சொல்வதில்
எனக்குண்டு மகிழ்ச்சியும், சிறு கர்வமும்
எப்போதும் அப்பா...

இன்று நான் பெற்றுவிட்ட அனைத்திலும் உங்கள் உழைப்பு உள்ளது
என் வெற்றிகளுக்கு பின்னல் நீங்கள் இருக்கிறீர்கள்
தோல்விகளுக்கு பின்னால் சாய்ந்து கொள்ள உங்கள் தோள் இருக்கிறது

நன்றி நன்றி நீங்கள் நீங்களாகவே இருப்பதற்காக...
இப்போதும், எப்போதும் நான் உங்களுக்கே மகனாக வேண்டும்
என்றும் உங்கள் அன்பு ஒன்றையே வேண்டும் உங்கள் பிரிய மகன்
கெளதம் இளங்கோ

எப்போது மலரும் புதிய இந்தியா

புதிய இந்தியா!

"levis jeans" ஸும்,"van heusen"ஸும்
வந்ததால் - எங்களின்
பருத்தி ...காதி துணிகள்
... பழசாய்ப் போயின!

"நைட்டியும்","கவுனும்"
வந்ததால் - எங்களின்
தாவணிகளும்,புடவைகளும்
தரமிழந்துப் போயின!

"pizza" வும் "burger" ம்
வந்ததால் - எங்களின்
இட்லி,சப்பாத்திக்களை
சுவை இழக்க வைத்தன!

"axe perfume" ம் "olay" க்களும்
வந்ததால் - எங்களின்
மஞ்சளும்,மருதாணிக்களும்
வாசம் இழந்துப் போயின!

"valentine's day, friendship day" க்களும்
வந்ததால் - எங்களின்
நட்புக்களும்,கல்யாணங்களும்
கோர்ட் படிகள் ஏறுகின்றன!

"cricket"ம்,"golf" ம்
வந்ததால் - எங்களின்
கபடியும்,மல்யுத்தமும்
களையிழந்துப் போயின!

"standard charted ம் american express bank" ம்
வந்ததால் - எங்களின்
கூட்டுறவு வங்கிகள்
திவாலாகிப்போயின!

"dollar ம் euro" க்களும்
வந்ததால் - எங்களின்
மூளைகள் வெளிநாடுகளில்
அடமானத்திற்க்கு விற்கப்பட்டன!

இதோ....
"walmart" டும்,"tesco" வும்
வருவதால் - எங்களின்,அண்ணாச்சி கடைகளும்
நாடார் அங்காடிகளும்,செட்டியார் வியாபாரங்களும்
உழைக்கும் விவசாயிகளும் கூட இனி...
அமெரிக்கர்களின் எகாதிபத்யத்தில்
மீண்டும் அடிமையாகப் போகிறார்கள்.

ஆண் பெண் கலாச்சாரம்


மீண்டும் ஒரு பதிவுடன்
கெளதம் இளங்கோ

நண்பர்களுக்கு வணக்கம்

இன்று இந்த அழகான மாலை (மழை) வேலையில் வேலைப்பளு குறைந்த வேலையில்
தமிழனுடைய சிறப்புகளை பற்றிய ஒரு அரிதான புத்தகமொன்றை இணையதளத்தில் வாசிக்க நேர்ந்தது
நல்ல அருமையான புத்தகம், ஆசிரியரின் வரிகளில் நம் தமிழர்களின் ஆளுமை திறனையும், போர் நெறிகளையும், பண்டை தமிழரின் வாழ் நெறிகளையும், கலாச்சாரங்களையும் நாம் கண்கூடாக பார்க்கும் படி இருந்தது

ஆனால் அதை படித்து முடிந்ததும் எனக்குள்ளாக ஒரு கேள்வி
இது ஒரு பெண்ணியம் சார்ந்த கேள்வியாக கூட இருக்கலாம்.
தவறேனும் இருந்தால் மன்னியுங்கள்

தமிழரின் பெருமையை உலகறிய செய்த பெருமையும் மற்றும் உலகமே அதிர்ந்து வியர்ந்து பார்க்ககூடிய கட்டுமானமாகிய தஞ்சை பெரியகோவிலை உருவாகிய பெருமையும் ஒரு சேர இருக்கும் சோழ மன்னன் "இராஜ இராஜ சோழன் "அவரை பற்றி ஆசிரியர் குறிப்பிட பொழுது அவருடைய பெருமைகளில் ஒன்றானதும் சிறந்ததுமான சோழனுடைய அந்தபுரத்தில் ஆயிரமோர் கொண்டிமகளிர் (தேவதாசி) இருந்ததாக வரலாறு உண்டு..
இருந்தாலும் அவன் சிறந்த ஆளுமை திறன் கொண்ட மன்னன் என்பதால் மட்டும் போற்றபடுகிறான்..இதுவும் கலாச்சாரம்....

ஆனால் சோழர்களின் அரண்மனைகளில் உள்ள அரச குடும்பத்து பெண்களுக்கு காவலர்களிடம் கூட பேச அனுமதி இல்லை என்பதும் வரலாறு...இதுவும் கலாச்சாரம்

இதன் மூலம் என கேள்வி என்னவென்றால்
கலாசாரம் என்பதில் இருபாலருக்கும் சம பங்கு உண்டு என்பதிலும் சரி
இங்கே இராஜ இராஜ சோழனுடைய கலாச்சாரமும் சரி

ஆணுக்கு வேறு கலாச்சாரமும்
பெண்டிருக்கு வேறு கலாச்சாரமும்
உண்டா..??

இது வரலாற்றில் மட்டும் அல்ல நடைமுறை உலகிலும் மிகுதியாக காணப்படுகிற ஒரு நிகழ்வு தான்
கலாச்சாரத்தை கட்டி காப்பதில் பங்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் சம கடமை இருக்கிறது என்பதை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம்

பெண் தவறினால் களங்கம் அதுவே
ஆடவன் தவறினால் அது ஆண்மையின் அடையாளமா..??

எனக்கு உள்ள அதே கேள்வியுடன்
கவிஞர் நந்தமீனா அவர்களின் கவிதை

""பத்திரிக்கையாளர்களே!
விபச்சாரிகள் கைது என்றுதானே
விற்பனையாகிறது..
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விபரம் வெளியிடாது ஏன்...?

பெண்களின் புனிதத்தை விட
ஆண்களின் புனிதம்
அவ்வளவு பெரிதா?"""

நன்றி
கெளதம் இளங்கோ

கேள்வி..??


"நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்"
என்றும்
"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே"
என்றும்
அரசனை குறித்தும் ஆண்டவனை குறித்தும் 
நாம் கேட்ட கேள்விகள் எங்கே...???

இப்போது உள்ள நிலைமையை பொறுத்த வரை
கொடியவர்களின் கொடுஞ்செயலால் ஒரு சமூகம் அழிவதில்லை
ஆனால்
நல்லவர்களின் மௌனத்தால் அது அழிகிறது...
இது என்ன அவலம் ...??

இதையே தான் திருவள்ளுவர்
"செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து"
(குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாக இருப்பது கேள்வி ஞானம் மட்டுமே )

பள்ளியிலிருந்தே பதில் சொல்லி வளர்க்கப்படும்
குழந்தைக்கு கேள்வி கேக்கும் பழக்கம் எப்படி வரும் ..????
அப்படி கேட்டால் அவனுடைய பதில் இப்படி தான் இருக்கும்
இராமன் ஆண்டால் என்ன ..??
இராவணன் ஆண்டால் என்ன ..??

நமது நாட்டில் தான்
பால் விலை ஏறுகிறது
எரிபொருள் விலை ஏறுகிறது
வெங்காய விலை ஏறுகிறது
பொன் விலை ஏறுகிறது
ஆனால் நாம் கேக்கும் கேள்விகள் மட்டும்
அரசாங்கத்தின் காதுகளுக்கு ஏறவேயில்லை

நிறைந்த பொருளில் கரைந்து கிடப்பவனுக்கு
ஏழைகளின் ஓலம் எப்படி கேட்கும்..?

இருந்தும் கேட்பது நம் கடமையல்லவோ........!!!!!

கெளதம் இளங்கோ

தமிழ் புத்தாண்டு


நண்பர்களே / தோழிகளே
தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க வந்தேன் ஆனால் தமிழனின் இன்றைய நிலையை பொறுக்க முடியாமல் எழுதி இருக்கிறேன்

தமிழ் எப்போது தலை நிமிரும் ?

தமிழ் புத்தாண்டுக்கு காலையில்
கனிகள் நகைகளில் கண் முழிப்பது இருக்கட்டும்

கன்னித் தமிழ் ஏடு எடுத்து
கற்க கசடற என தூய தமிழ் படிப்பது எப்போது..???

இன்று ஒரு நாளேனும்
பிற மொழி கலப்பின்றி
பைந்தமிழ் எழுதுவோம்
பேசுவோம்...

தமிழனாய் நாம் வாழ்ந்திடுவோம்
தமிழாலே தலை நிமிர்ந்திடுவோம்

தமிழை நேசிப்போம்
தமிழில் பேசுவோம்

உங்கள் அனைவருக்கும்
எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஒன்றாய் இருக்கையில் 
உன் பிறந்தநாள் ஒரு திருவிழா கொண்டாட்டம்.. !

சிலநாள் நட்பு பலநாள் வெறுப்புக்கள் 
இருந்தன நம் இடையில்....!

திரும்பும் பக்கமெல்லாம் நண்பர்கள் அக்காலம்
பூத கண்ணாடியால் தேடினாலும்
ஒரு சிலரே உண்மை இக்காலம்...!

வாடி நின்ற தும்பை
செடிக்கு தன் உடல் கிழித்து
நீர் என்ற உணவை ஊட்டிய
மேகம் போல் வந்தான்
என் நண்பன்,

அவன் முதல் சந்திப்பு
என் இதயத்தில் பூத்த
வெற்றி என்னும் வகை பூ,

உயிர் இழந்து சருகை தாங்கிய
மரக் கிளை போன்ற -என்உதடுக்கு புன்னகை எனும்
தளிர் இலையை தந்தவன் -என்
நண்பன்,

சிறு நீரில்
குறு நிலம் கொண்ட
கிணற்ற்று தவளையான -என்னை
பவளம் பெற்று பரவிகிடந்த
நீல கடலில்
எனை நீந்தச் செய்தவன்
என் நண்பன்,

அவன் நட்பில் ஊறிப்
போன எனக்கு
அவன் பேனா அழும்
மை கூட சுமையே,

ஆனால் உடைந்த என்
இதயச் சிலேடை தாங்கிய
என் நண்பன் என்றும்
எனக்கு சுமை தாங்கியே
நாளெல்லாம் நட்புடனே நாமென்றும் நடைபோட
ஆண்டு நூறு நீ கடந்து ஆனந்தமாய் நீ வாழ .

நட்பின் வாழ்த்துக்கள் இந்த
நண்பனின் வாழ்த்துக்கள் .......... 

ஓடலும் தேடலும்

ஓடலும் தேடலும்
தினசரி வாழ்க்கையில்
மிக முக்கியமாகி போனது…

ஒவ்வொரு தேடலின் முடிவில்
மற்றொரு தேடல்
நம்மை கேட்காமலே
பிறந்துவிடுகிறது…

ஒவ்வொரு நாளும்
மணித்துளிகளின் கரைப்பில்
கரைந்துக் கொண்டேபோகிறது…

மணித்துளிகளில்
கரைந்து போகும் நாட்களாய்
நம் ஒவ்வொருவரின்
விடியலிலும் ஏதோ
ஒரு தேடல்
பிறந்துக் கொண்டேயிருக்கிறது

மரணம் பிறகு ஜனம்
என்பதனைப் போல்…

இந்த தேடலில்
தொலைந்த நாட்களை எண்ணி
வீழ்ந்து விடாதே

அது வாழ்க்கையில்
உயிரோடு புதைத்துவிடும் உன்னை…

மறவாமல் நினைவு கொள்
“நேற்றைய தொல்விகளிலும்
நாளைய கனவினிலும்
இன்றைய வாழ்க்கையை
தொலைத்து விடாதே”

சிறுவயது கனாக்காலம்

கனவுகளையும் கைப்பிடித்து
தும்பியின் வால் பிடித்து
பட்டாம் பூச்சிகளாய்
சுற்றித்திரிந்த காலம்…

காலம் கடந்தாலும்
இன்றும் என் நினைவில்
வந்து போகிறது
வசந்தமென வாழ்ந்த
சிறுவயது நியாபகங்கள்…

திருட்டு மாங்காய்
ருசித்தது முதல்
நுங்கில் வண்டி செய்து
ஓட்டியது வரை

அப்பப்ப எத்தனை
எத்தனை லீலைகள்…

எங்களை கண்டு
வெயிலும் பயந்த காலங்கலுண்டு

இன்று நினைக்க
வந்து தான் போகிறது
அனைத்து நிகழ்வுகளும்
நிகழ்வுகளாகவே

மீண்டும் பிறக்காத
கனவுகளாகவே…!!

குடியரசுதின நல்வாழ்த்துக்கள்..!


குடியரசுதின நல்வாழ்த்துக்கள்..!

விடுதலை இந்தியாவில்
விடியலைத் தந்தது
குடியரசு!

பள்ளத்தில் வாழ்ந்தவர் சிலர்!
வெள்ளத்தில் மிதந்தவர் சிலர்! – அனைவரின்
உள்ளத்தைச் சமப்படுத்தியது
குடியரசு!!

சுதந்திரம் அடைந்தாலும்
தந்திரமாய் நுழைந்தது ஜாதி! – இந்தியாவில்
சுதந்திரமாய் சுற்றித்திரிகிறது ஜாதி!!

மானுடத்தை
மந்திரம் போட்டு மரிக்கவைக்கிறது மதம்!

இந்தியனை
எந்திரமாய் ஓட வைக்கிறது தீவிரவாதம்!!

இளைஞர்கள் கைகோர்த்து
நம்பிக்கை கொடிபிடித்து
குடியரசைப் போற்றுவோம்! – நம்தேசக்
கொடிதனை ஏற்றுவோம்!!

தேசப்பற்றுடன்
கௌதம் இளங்கோ

தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

தாயுமான தந்தைக்கு
என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
அப்பா நான்
கருவாய் கனிந்த காலத்திலே
கால்களால் உதைத்தபோதும்
அன்னையை கட்டியணைத்து
அழகாக துள்ளுவதாய்
ஆனந்தப்பட்ட அப்பா உனை
அன்றே பார்க்க ஆசை தான் !!!

தவழும் வயதில்
பூமியிலே பூக்கள் விரித்து
தரையிடம் பகை தீர்த்த
பாசக்கார அப்பா நீ !!!!

நடை பயின்ற போது
கூச்சலிடும் ஷூவை விட
உனது கைதட்டல் உரக்க
கேட்குமப்பா,
ஊரையே கூட்டுமப்பா!!!

பள்ளியிலே விட்டுவிட்டு
பாதியிலே திரும்பிவந்து
படபடக்கும் உனை
உன் அன்னை பார்த்தால்
பாவிப்பாள் அரை வயது
குழந்தையாய் உனை !!!

அடி அடியாய் நான் வளர
அணு அணுவாய் ரசித்து,

தோள் தொட்ட போதும்
தோழனாய் பாவித்த உனை,

தகப்பனாய் பிரமன் அவன்
தாரைவார்க்க என்ன நான்
தவம் செய்தேனோ ???

உன்னிடம் கற்றது
ஒன்றா இரண்டா ???
உயிருள்ளவரை உணர்வுகளை
கட்டுபடுத்த !!! உறவுகளை
அரவணைக்க !!! தவறுகளை
திருத்திக்கொள்ள !!! ஆசைகளை
நிறைவேற்ற !!! நெஞ்சங்களை
நேசிக்க !!! அடுக்குவேன்
அளவில்லாமல் !!!!
மற்றோர் பிறவியில்
எனது பிள்ளையாய்
நீ இருக்க, இறைவனை
பிரார்த்திக்கும்
உன் அன்பு ...
மகன்
கௌதம் இளங்கோ

மார்ச் 8 உலக மகளிர் தினம்.

மார்ச் 8 உலக மகளிர் தினம்.
♥♥♥♥♥♥♥

மன்னித்து விடுங்கள்
சகோதரிகளே..!

புதுச்சேரி வினோதினி,

சென்னை வித்யா,

டெல்லி பிசியோதெரபி மாணவி,

இன்னும் மீடியாக்களின்
கண்ணுக்கு புலப்படாத
எத்தனையோ குக்கிராமங்களில்
பாலியல் வன்மொடுமைகளால்
இன்னுயிரை பறிகொடுத்த
உங்களிடம்
மன்னிப்பு தான்
கோர முடியும் .

மகளிர் தினத்தில்..
வாழ்த்துச் சொல்லும்
அருகதையற்ற ஆண் இனத்தில்
பிறந்துவிட்டதால்...

மன்னிப்பு கோருகிறோம்
மன்னித்து விடுங்கள்.!

சகோதரன்,
கௌதம் இளங்கோ

வெட்கம்


வெட்கம்
=============== =====
தலைநிமிர்த்தி,
பார்க்க வேண்டிய..
வெட்க வானவில்...
நீ..! 

விடுமுறை நாட்கள் எல்லாம்,
'விடும் முறை' நாள் தான்
உன் வெட்கத்திற்கு.. .!! 

நீ உதடு சுழித்து வெட்கப்பட்டாய். .
வெட்கம் வழிந்து கோலமிட்டது.... ! 

உன் வெட்கக்குழந்தையை,
வெளிவாராமல் அடைக்காக்கிறது. .
உந்தன் காதல் கரங்கள்...!! 

அள்ளி அள்ளிக் கொடுக்கும்,
அட்சயப்பாத்திரம் கூட,
சமயங்களில் தோற்பது உண்டு,
நீ அள்ளி அள்ளிக் கொடுக்கும்,
வெட்கத்தின் முன்பு...!! 

இத்தனை முறை வெட்கப்பட்டும்,
இன்னும் குறையாமல் உள்ளது..
உன் வெட்க வங்கி கணக்கு...!!! 

வெட்கத்தை மட்டுமே,
எத்தனை முறை தான்
அணைத்துக் கொள்வாய்...??
வெட்கமே வெட்கப்படுகிறது ..!
என்னையும் கொஞ்சம் அணைக்கவிடேன்... !! 
உன் நாண மலர்களை கொய்து,
இதழ் பா(சே)ர்க்க ஆசை தான்...
ஆனால் மலா்களை கொய்வதிலே..
என் முழுக்கவனமும் சிதறுவதால்....
எங்கே உன் இதழ் பா(சே)ர்ப்பது.. .???!

மாறிவிடு பெண்ணே ...


பெண்ணே!!!
அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்ப
இவை அல்லவா உன் சொத்துக்கள்

பரதம் ஆடும் உன் கால்கள்
டிஸ்கோ ஆடலாமா???

பயப்படும் உன் நெஞ்சம்
பயங்கர வாதி ஆகலாமா???

பட்டுச்சேலை கட்டி
பவளச் சீமாடியாய் திரியவேண்டிய நீ
அரை குறை ஆடையுடன்
ஆவியாக நடமாடலாமா???

தங்கச் சிமிட்டி போடும் காதில்
இரும்பு வழையங்கள் ஊஞசல் ஆடலாமா???

உதடு,நகம்,கண்இமைக்கு சாயம் பூசி
சாகாசம் காட்ட அழகு படுத்துகின்றாய்
எம் பண்பாட்டை அழகு படுத்த தயங்குகின்றாய்

நாடு மாறிப்போனாலும்
நம் பண்பாடு மாறிப்போகாது

சிரிப்புக்கள் சிந்தும் செவ் உதடில்
சிகரட் கட்டை உரசலாமா???

நாணம் உள்ள பெண்கள் நீவீர்
நாள் தோறும் ஆண்களுடன் சுற்றலாமா???

பாடசாலைக்கு போய்வாறேன் என்று
பகட்டு வாழ்க்கைக்காக
படுக்கை வரைக்கும் செல்லத் துணிந்து விட்டாய்
பெண்ணே!!!

தெய்வங்களாய் உன்னைப் போற்றும் மக்களிற்கு
தெரியாது உன் சுயரூபம்
பண்பாட்டை பரதேசி அக்குகிறாய்
பெண்ணே!!!

பாரதி கண்ட பூதுமை பெண்கள் தோன்றி
பல ஆண்டு ஆகிவிட்டது

கற்புக்கரசி கண்ணகி எங்கே???
புரட்சீ தலைவி ஜன்சீரானி எங்கே???
கலியுகம் வந்து விட்டது என்று
கடல் கடந்து சென்று விட்டார்களா???

தரணி தொடவேண்டும் என்றால்
வானத்தில் மின்னும் தாரகை போல்
பெண் பெண்ணாக இருத்தல் வேண்டும்
பொன்கள் தந்தாலும் சரி
வைரம் தந்தாலும் சரி
வைரம் செறிந்த எம் பண்பாட்டை
ஏலம் போட்டு விற்று விடாதே பெண்ணே...!

தமிழுணர்வுடன்
கௌதம் இளங்கோ

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


விருஷ்ய மழை பெய்து உலகத்தை பசுமையாக்கும்
விஜய வருடத்தில்
வளமான வாழ்வு,
நிறைவான மனது,
சுவையான உணவு, 
சுகமான உறக்கம்,
அழகான உடை,
அன்பான பேச்சு,
அறிவு நிறை கல்வி,
தேவையான செல்வம்,
தெளிந்த சிந்தனை,
நேர் கொண்ட பார்வை,
வலியில்லா வாழ்வு,
நோயில்லாத உடல்,
கலங்காத மனம்,
எல்லையில்லா மகிழ்ச்சி,
எல்லோரும் சமமென ஏற்றதாழ்வில்லாத சமுதாயம்,

பகைமை களைந்து
பாசம் பகிர்ந்து
இனிமையான வாழ்வை எதிர் நோக்கி பயணிப்போம்...!

மங்கலம் பொங்கட்டும் நம் அனைவரது வீட்டிலும்

மகிழ்ச்சி பொங்கட்டும் நம் அனைவரது உள்ளத்திலும்...!

ஆனால்
நண்பர்களே / தோழிகளே
தமிழ் எப்போது தலை நிமிரும் ?
தமிழ் புத்தாண்டுக்கு காலையில்
கனிகள் நகைகளில் முழிப்பது இருக்கட்டும்
கன்னித் தமிழ் ஏடு எடுத்து
கற்க கசடற என தூய தமிழ் எப்போது படிப்போம்..?
அதனால்
"இன்று ஒரு நாளேனும்
பிற மொழி கலப்பின்றி
பைந்தமிழ் எழுதுவோம் பேசுவோம்"
சுத்த தமிழனாய் வாழுவோம்
உங்கள் அனைவருக்கும்
எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

என்றும் தமிழுக்கு காவலனாய்...!
கௌதம் இளங்கோ 

பெண் எப்போது அழகாக இருக்கிறாள்

படித்ததில் பிடித்தது

கவிஞர் மகுடேஷ்வரன் அவர்களது 

""பெண்
எப்போது அழகாக இருக்கிறாள் ?""

பார்க்காதபோது பார்த்து
பனங்கிழங்கின் நுனியளவு சிரிக்கும்போது.

வெள்ளிக்கிழமை தலைகுளித்து
கூந்தல் அடர்த்தி கூடியிருக்கும்­போது.

செருப்பணிய பாதமெடுத்து
நடன வகையில் அபிநயிக்கும்போது.

மாப்பிள்ளை வீட்டார் பார்த்துச்சென்றபின்
வரும் மாலைப்பொழுதின்போது.

கல்லூரித் தேர்வில் தோற்றுவிட்டுத்
தந்தைமுன் தெளிவாக நிற்கும்போது.

தழைந்திருக்கும் ­ சேலையை
வீடு துடைக்க அள்ளிச் செருகும்போது.

வியர்த்த நெற்றியை
விரல்தீண்டி வழிக்கும்போது.

செல்லப் பிராணியிடம்
தனித்த மொழியில் பேசும்போது.

சிறுமிகள் சூழ
மலர்வனத்தைக் கடக்கும்போது.

சிரிப்புக்கிடையில் சிந்தனையால்
நெற்றி சுருக்கும்போது.

பேருந்து நிறுத்தத்தில்
மணிபார்த்து வழிபார்த்து ஏங்கும்போது.

தலையிலும் இடையிலும்
தண்ணீர்க் குடஞ்சுமந்து தளும்பாது செல்லும்போது.

தலைப்பிள்ளையைச் ­ சூல்கொண்டு
மருண்டு நிற்கும்போது.

எல்லாராலும் கைவிடப்பட்டவனை
ஏற்றுக்கொள்ள முடிவெடுக்கும்போது.


கவிஞருக்கு நன்றி...!
தாய்,மனைவி,மகள் ,சகோதரி,தோழி என அனைவரும் இதை படிக்கும்போது மனக்கண்ணில் வந்து செல்கின்றனர், அற்புதம் கவிஞரே..!
அன்பு நண்பர்
கௌதம் இளங்கோ

மே தினம்

மே தினம்
^^^^

பெரும்பானமையெனும்
பேரிரைச்சலில்
வெள்ளப்பெருக்கி­ன் வீரியமாய்
அடித்துச் செல்லும்
சிறுபான்மையின் பெருகுரல்...

ஒரு விடியலுக்கான காத்திருப்பில்
அன்றாடம் வேர்வையாய் சிந்தும்
உதிரத்துளிகள் கணக்கெடுப்பில் வருவதில்லை
நிர்ணயித்த கொடைக்கூலியால்...

விலைவாசி அரக்கனின்
கொடூரப்பசியில் குரல்வலை சிக்கி
நசித்துக் கொண்டிருக்கும்
எங்களுக்கு கொண்டாட்டமாய்
பேரில் மட்டுமே புழங்குகிறது
இந்த மே பெரு தினம்..

ஒரு விடியலுக்கு
காத்திருப்பு
முடிவுக்கென சில
பிணக்காய் பல
ஆரம்பத்திற்கு
அகம் மகிழ
பொய்கள்
புறவாழ்வு வெறுத்து
மரணம் வாங்கி
மனமகிழ்தல்
வினாக்களோடு வீதி வலம்
புறக்கணிப்பு
தெளிதல்
இழத்தல்
உணர்தல்
ஊழியம்
போதும் இந்த பெருவாழ்வென
ஒய்வெடுக்கும் போது
விஸ்வரூபம் எடுக்கும்
முதுமை என்னும் இயலாமை
முடியும் வரை நிமிரவே நேரமின்றி
முடிந்து போகிறது எங்கள் பிறவி
இருந்தும் தன்னம்பிக்கை
தளர்வதில்லை எங்களுக்கு
வறுமை கோட்டை சற்று தளர்த்தி தான்
ஓய்கிறோம் எங்கள் சந்ததிகளுக்கு
கல்வியென்னும் களஞ்சியத்தை காட்டி..!


தமிழ் வாழ்க..
உழைப்பாளர் நலம் வாழ்க.,

கௌதம் இளங்கோ

சிறுவயது பள்ளி

என் சிறுவயது ஞாபகங்கள்.

♥என் பள்ளி♥

உன்னை தாண்டி அந்த ஒரு நொடி
என் எண்ணத்தின் நினைவலைகள்
போட்டி போட்டு கொண்டு
என் இமையை கரையாக
நனைத்து விட்டு போகின்றதே!!!!

என் முதல் வெற்றி,
முதல் நட்பு,
முதல் அரட்டை,
முதல் காதல்,
முதல் கவிதை,
அனைத்தும் உன் மடியிலே படுத்து படித்தேன் ;

வாழ்வின் ஏற்றங்கள்
பல மாற்றங்களை ஏற்படுத்தியது ,
உன்னை பிரியும் சோகமும் அவற்றில் ஒன்று.

ஆண்டுகள் பல உருண்டு சென்றாலும்
இன்றும் அதே நிமிர்வுடன்
அதே இடத்தில் நீ;
ஆனால் இன்றும் உன்னை கண்டுகொள்ளாத நான்;

எனை வடித்த சிற்பி நீ
என்றும் மறவேன் உன்னை!!!!!

கௌதம் இளங்கோ

வாழ்த்துக்கு நன்றிகள்

எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த என் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

வெட்டிக் கொண்டாட விருப்பமில்லை-கேக்கை
ஒட்டிக் கொண்டாட விரும்பினேன் - எனவே என்
சுட்டிக் கவிதைகளை மலர் சரமாக்கி - உங்களை
கட்டி வைத்தே தமிழ் விருந்து வைத்தேன்....!

தட்டிக் கழிக்காமல் அதை ரசித்தீர் - செல்லமாய்
குட்டி என்னையே சிறக்க வைத்தீர்.....!

புட்டிப் பாலருந்தும் மழலைக்கும் - தாயின்
மெட்டி ஒலி அது மெல்லிசை போல் - என்னை
திட்டி திறமை செய்த தோழியரே தோழர்களே
முட்டி முயற்சி செய் முன்னேறுவாய் என்றீரே

வாட்டி வதைக்கின்ற நினைவுகள் புறம் தள்ளி
போட்டி புவனத்தில் புத்துணர்வு பெற வைத்தீர்
கூட்டி கழித்துப் பார்த்தேன் - மனம்
பூட்டி வைக்காமல் சொல்லுகின்றேன் - மதி
தீட்டி மகிழ வைப்பது எழுத்துலக நட்புக்களே - அது
திகட்டி முடிவது அல்ல தமிழ் புகட்டி வளர்வதுவே

அகட்டி மனம் வைத்தேன் அலைகடல் சுருங்கியது-தீமை
கழட்டி எரித்திடவே எழுத்து நட்பு வாழ்த்தியது - தமிழ்
திரட்டி கவிகள் செய்வோம் - தமிழ் எதிர்க்கும் படை
விரட்டி எள்ளி நகை செய்வோம்.....
அவர் இனி
சுருட்டி ஓடட்டும் நாம் சுந்தரத் தமிழ் செய்வோம்..

ஊட்டி விடுவோம் தென்றலுக்கும் தமிழ் சோறு
காட்டிக் கொடுப்போம் இனிமையை உலகுக்கு - இனி
மீட்டி இசைக்கட்டும் இதழெல்லாம் தமிழ் பேசி - தலை
ஆட்டி ரசித்திடும் தமிழ் மொழியில் பேசிடுவோம்.......!

குறிப்பு : எனது பிறந்த நாள் அன்று (30.6.2013)
வாழ்த்திய முகப்புத்தக தோழிகளுக்கும் / தோழர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள்

அன்புடன்
கௌதம் இளங்கோ

ஆசிரியர் தினம்

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..

மடி யமர்த்தி கை பிடித்து
எழுத்தறிவித்த
என் முதல் ஆசிரியை “S.R ராணி,கோமதி”

மதிப்பு மிக்க கணக்கறிவைக்
சூட்சமமாய்க் கற்பித்த
பெருந்தகையாய்
“கலைதாஸ்,முருகன்” ஆசிரியர்

பொறுப்புடனே
என் குறும்பையெல்லம்
பொறுத்தாண்டு
அன்புடனே அரவனைத்த
“அமல்ராஜ்.பிரான்சிஸ்"


என் அன்னைக்கும் ஆசானாய்
எனக்கும் வழிகாட்டிய
"அய்யாச்சாமி,மணி"

என்று
எத்தனையோ ஆசிரியர்கள்...
என்வாழ்வில் விளக்கேற்ற
உழைத்ததெல்லாம் நினைவாக…

கணக்கில்லாக் குருமார்கள்…
மகாக்கவி பாரதி முதல்
அன்பையேத் தெய்வமாக்கி
அரூபத்தை என்னுள் நிரூபித்த
இன்னைறய ஏனைய கவிஞர்கள் வரை
அருள் மழையால் அணைத்தவர்கள்
அனைவரையும் வணங்குகின்றேன்...
வாழ்க வளமுடன்…!

அனைவருக்கும் என் இதயங்கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.!

கௌதம் இளங்கோ

"கண்ணீர்ச்சுமை"

"கண்ணீர்ச்சுமை"

விழிகள் கனக்கின்றன
கண்ணீர்ச் சுமையால் ..
துயரத்தின் சுவடுகள்
கண்ணீர்க் கோலங்களாய்
முகம் முழுவதும் ..!
அழுகிறேன்...
இனி அழுவதற்கு
கண்ணீர் இல்லையெனும் வரை .. !
துடைப்பதற்கு விரல்கள்
வருமென துயரத்தை கொஞ்சம்
மிச்சம் வைத்தேன் .. !

நொடிகளில் தொடங்கி
நிமிடங்களில் விரைந்து
மணித்துளிகள் மறையும் பொழுது
உணர்ந்தேன் இன்னும் எந்த விரல்களும்
எந்தன் கண்ணீரை கோத
வரவில்லை,
பாவம் அவர்களுக்கு
வேறு வேலை இருந்திருக்கும்....

உப்பு நீர் பட்டுக்
கரித்த உதடு
வறட்டு
புன்னகையில் விரிந்தது
விதியை உணர்ந்து ..

குனிந்து கைகளைப்
பார்த்தேன் பத்து
விரல்கள் இருந்தன
என்னிடமே ..
நானே அறியாமல்
விக்கித்து நின்ற போதிலே
விழிநீர் கரைபுரண்டோடியது ,
மகிழ்ச்சி வெள்ளத்தால் அல்ல !
பிறர் கையை
எதிர்பார்த்து என்கையை
நானே மறந்து போனேனே என்று !!
கெளதம் இளங்கோ

நண்பனுக்கு பிறந்தநாள்

நண்பா என் தாய்க்கு இணையாக நீ தரும் அன்பிற்கு 
ஒரு தோழனாக இந்த கவிதையை காணிக்கையாக்குகிறேன்
உன் பிறந்தநாள் பரிசாக....!!!

கண்ணில் காண்பதெல்லாம் நனவென்று நம்பாதே... 
காணாத கனவுகளும் நனவாகிப் போகலாம்...
நிகழ்கால நிழலில் மட்டும் ஓய்வெடுக்க எண்ணாதே...
எதிர்கால மர நிழலில் இறந்த காலத் தென்றல் காற்றின் இதமான அரவணைப்பில் சுகமாக ஓய்வெடு...
கண்களை மூடித் திறக்கும்முன் உன் கற்பனையைத் திறந்துவிடு..!
பூக்களின் வாசனையை நுகர்வது தவறல்ல...
அதிலுள்ள முட்களின் வேதனையையும் புரிந்துகொள்.. !
புன்னகையே வாழ்க்கையல்ல..பூகம்பமும் வரும் புரிந்துகொள்...!
நீ விதைத்ததை நீயே அறுவடை செய்வாய்;
அன்று கொள்ளாவிடினும் நின்றாவது கொள்ளும்..
மாற்றான் துயரம் மற்றுமல்ல; மதுவும் ஏன் மாதுவும் கூட...

மற்றவன் கண்களில் தெரிவது கண்ணீரென்று மட்டும் எண்ணாதே,
அது நஞ்சாகவோ அல்லது தீயாகவோ ஏன் உனக்கெனவே செய்த புதை குழியாகவோ கூட இருக்கலாம்....
ஆனால்
இது "நீ"..
உனக்கென ஒரு பாதை..
உனக்கென ஒரு பயணம்..
உன்னோடு சில பயணிகள்..
உலகம் உன் கையில்...

இது நீ "பிறந்த நாள்" அல்ல..
உன்னை நன்கு ஒரு முறை "உணர்ந்த நாள்" ஆயினும்...
வானளவுக்கு உன் புகழ் உயரட்டும்
வேடிக்கை பார்த்து
பாராட்ட நானும் நிச்சயம்
இருப்பேன்
கடைசி வரிசையில்
கைதட்டிக் கொண்டு....

நீ பல்லாண்டு காலம் வாழிய வாழியவே .
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பார்த்திபா...
அன்பு நண்பன்
கெளதம் இளங்கோ

தந்தையர் தினம்

தந்தையே உன் வயிற்றில் சுமக்காவிட்டாலும் காலமெல்லாம் சுமந்தாய் உன் நெஞ்சினில்.. 
கருவறை மட்டும்தான் உனக்கில்லை தாயென்று சொல்ல உன்னை.. 
உன்னை மறந்தாய் 
உறக்கம் தொலைத்தாய் 
உழைத்தாய்
களைத்தாய்
வேர்வையில் குளித்தாய் நாங்கள் வாழவே நலமாய்...
வலிகள் எம்மைத்தாக்கினால் வலிப்பதென்னவோ உனக்கல்லவா..
துயரங்களால் எம் விழி நனைந்தால் துடைப்பது உன் விரல்கள் அல்லவா..
சோதனையானாலும் வேதனையானாலும் தோல் கொடுக்கும் தோழன் நீயல்லவா... உன்னைப்போற்ற ஓர் நாள் மட்டும் போதுமா...
அனுதினமும் போற்றப்படவேண்டும்
உன் புகழ் பூவுலகம் வாழும் காலம் வரை

அன்னையர் தினம்

அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

என் உயிரும் உணர்வுமாகிய 
என் அன்னைக்கு சமர்ப்பணம்...

வலியை தாங்கி
பிறவி கொடுத்தவள்
ரத்தம் முறித்து
பாலாய் கொடுத்தவள் ............

இறக்கம் கொண்டவள்
உறக்கம் மறந்தவள்
பட்டினி கிடந்தாலும்
என் பசியை ஆற்றியவள் .............

இரவு பகலாய்
காத்து வளர்த்தவள்
என் தமிழ் கல்வியை
அறிமுகம் செய்தவள் ...........

பற்கள் முளைக்க
நெல்லால் கீரியவள்
முற்கள் கிழித்ததும்
அலறி துடித்தவள் ...............

கொட்டும் பணியிலும்
அடைக்கலம் கொடுத்தவள்
கொளுத்தும் வெய்யிலிலும்
குடையென தொடர்ந்தவள் ..........

அன்பில் கடவுள் அவள்
அறிவில் ஆசான் அவள்
என் நெஞ்சில் நின்றவள்
நினைவில் நிறைந்தவள் ...............

எவரும் அறியாத
என்னை அறிந்தவள்
என் நலம் நாடும்
என்னுயிர் தோழி அவள் ...........

உயிரை கொடுத்தவள்
உடலை வளர்த்தவள்
ஒழுக்கம் சொன்னவள்
என் உயிராய் ஆனவள் ...............

என்னையே தேடும்
என்றும் அவள் விழி
கருணை கொண்ட
கடவுளே அவள் மொழி ............

என்னுடையது அனைத்தும்
அவளது கொடையே
அவளை தொழுது
வாழ்வதும் வரமே ................

அன்னையர் தினத்தில்
மட்டும் இல்லாமல்
என்று போற்றுவோம்
அன்னையை தெய்வமாய் ..............

அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா......

கெளதம் திலகவதி இளங்கோ..

என் நண்பர்கள்....

என் கண்ணில் பதிந்த
என் நட்புகளே
என் வாழ்க்கை புத்தகத்தில்
எல்லா பக்கங்களிலும் நீக்கமற
நிறைந்திருக்கும் என் உணர்வுகளே
உங்கள் அனைவருக்கும்
இந்த கவிதை சமர்ப்பணம்
"அருண் பாண்டியன்"
நடையில் நளினம் கொண்டு
சிரிப்பில் சிதறடிக்கும்
நன்மிகு தோழனே -நீ
முகத்தில் பொலிவும் ,
கண்களில் கவர்ச்சியும் கொண்டவன்.
சிகை அழகில் சிறந்து ,
பேச்சில் ஈர்ப்பு காண்பவன்.
"அசோக் குமார்''
வானமென்ற
கல்லூரி நண்பர் கூட்டத்தில்
விண்மீனாய் ஜொலிக்கிறாய்.
காலம் கடந்து யோசிக்கையில்
நினைவின் முதலாய்
கனவில் உதிக்கிறாய்.
நண்பர்கள் உறவில்
வலம் வந்து தினந்தோறும் மலர்கிறாய்,
''அன்புசெல்வன்''
கனவால் சேர்க்கப்பட்டு
நினைவில் சுற்றப்படும் தோழன்.
என் உணர்வின் பங்களிப்பில்
இடம்பெறும் உயிரெழுத்து.
ஓரிரு வருடங்களில்-என்னில்
தொடங்கிய உன் நினைவுகள்
காலம் முழுதும் நிலைக்குமாட.
''சுபாஷ்''
தனக்கென ஒன்றை
உருவாக்கி கொண்டு
மற்றவர் பார்வையில் சுழல்கிறாய்.
பசும்புல் போல
வாழ்வில் தழைக்கிறாய் .
நண்பர் பகிர்வில்
உன்னதம் காண்கிறாய்.
''ராஜமகேஷ்''
தன் சொற்களினால்
அனைவர் மகிழ்விக்கும்
கருமை புன்னகை மன்னன்.
காற்றின் இதம் போல
தேகம் குளிர்விப்பவன்.
மலரின் வாசம் போல
உள்ளம் மலர்விப்பவன் .
''முனியப்பன்''
வானில் நானும் மிதக்கும் போது
படுக்கையாக பிடிபட்டாய்
சிறகால் சுற்றி பறந்து கொண்டு
எங்கள் உள்ளம் நெகிள்கின்றாய்.
என் சோகம் மறைக்க
உந்தன் உதட்டினில் நகைகின்றாய்
என்னில் வாசிக்கப்பட்ட
நன்பனில் ஒருவனாக திகழ்கிறாய்
''சிவசக்தி பாண்டியன்''
நினைவென்ற கொடிகளால்
சுற்றப்பட்டு
கனவில் மலரும் பூந்தோட்டமடா நீ.
அரட்டை அடித்து
காலம் கண்ட நாட்கள் சென்று
தனிமையில் உலவும்
பிரிகை நாட்களை சந்திக்க போகிறோம்.
அன்று
பிரிவும் கனவின் நினைவாகவே தோன்றும்.
''ஹரி ஷங்கர்''
என் கல்லூரி பயணத்தில்
காட்டப்பட்ட முதல் தமையன் .
கண்டெடுத்த முத்தை போல
கண்களால் இனங்காணப்பட்ட
ஒருவகை இனிமை தோழன்.
கற்பனை என்ற உளியால் செதுக்கப்பட்ட
வாழ்வில் அழியா நட்பின் படிவம்.
''ஜேம்ஸ் செலின்''
என் உதடுகள் முதன் முறை
சகோதரி என்றழைத்த தோழி.
காற்றின் மேகம் போல ,
நட்பில் படர்ந்த உண்மை தோழி.
பேசிய நாட்கள்
கடந்து போயிருப்பினும்,
நட்பின் நாட்கள்
நீண்டு கொண்டே செல்கிறது.
''நந்தினி''
உங்கள் தோழியர் கூட்டம்
வானமென்ற வகுப்பில்
விண்மீனாக ஜொலிக்க கண்டிருக்கிறேன்.
மலர்களின் பூந்தோட்டத்தில்
வாசமாக வீச முகர்ந்திருக்கிறேன்.
ஆனால்
உன்னிடம் என் வார்த்தைகள்
பேசியதில்லை தோழியே.
''சௌமியா''
எனக்கு பக்கபலம் கண்ட
நட்பில் பூத்த உதிரா பூ.
நட்பின் அன்பில் அரவனைக்கப்பட்ட ,
கலங்கமில்லா தோழியே....
சோகம் மறந்து விடு-ஆனால்
உண்மை நட்பை மறவாதே
''பிரியா''
உணர்வுகள் பகிர்ந்த
என் ஒருவகை தோழி
பிரியம் கொண்ட பெயரில்
பொறுமை கொள்ளும் தோழி .
உண்மையில்
நட்பை மதிக்கும் இதயம்
ஒருபோதும் மறவாது
நாம் கண்ட நினைவுகளை.
அதனை இழந்து விடாதே.
''சாரதப்ரியா''
கள்ளமில்லா மனம் கொண்ட,
நட்பு வட்டாரத்தின் பெரிய தோழி
உறவுகளின் மதிப்பின்
தன்னை உயர்த்திய தோழி.
சுவாசம்,
உயிராக இருப்பது போல ,
நட்பும்
என்றும் நம் நினைவாகவே இருக்கும்.
''விஜயலட்சுமி''
எங்கள் நண்பர்கள் இடையே,
மெதுவாக அறிமுகமாகிய தோழி.
ஆனால்,
நட்பின் வழியில் முதன்மை தோழி.
நட்பாக சுற்றி கொண்டு
வாழ்நாள் முழுதும் வாழும்
நட்பின் ஓவியம் .
''வைஷ்ணவி''
ஒரே பகுதி நந்தவனத்தில்
நான் இருவர் வசித்தும்
முதலில் இனம் கண்டு கொள்ளவில்லை .
பின்பு
உன் நட்புகிடைக்க பெற்றேன்.
திங்கள்போல
நம் நட்பு பிரகாசிக்க
ஆவல் காண்கிறேன் என்றும்.
''அருண் ரவி''
தோற்றுவிக்கப்பட்ட உறவுகள்
ஒரு போதும்
நிலை கொள்வதில்லை.
இயற்கை அளித்த
நட்பு மட்டுமே
காலம் முழுதும் பூக்கிறது.
உறவுகளுக்கு மதிப்பளிக்காதே ,
உணர்வுகளுக்கு மதிப்பு கொடு ....
''பாண்டியராஜன்''
வானம் தனக்கென்று
எதையும் நிலை கொண்டிருப்பதில்லை
அது போலவே
உன் நட்பும்.
எதையும் எதிர்பாரத நட்பு
சொர்க்கம் கண்ட மனம் போல.
மனதில் கொள்வதே நட்பு.
நடைமுறை எதிர்பார்ப்பதல்ல என்றும்.
"தினேஷ்"
அயல்நாட்டின் அன்பு நண்பன்
உறவுகளை பிரிந்து உயிரற்று
வசிக்கிறோம் நண்பா,
பேசி கொள்ளவும்
பகிர்ந்து மகிழவும்
கடவுள் நமக்களித்த உறவு நட்பு மட்டுமே.
''கஸ்தூரி அசோக்''
என்நட்பின் சுவடுகள் கூட
உன்னில் உள்ளதா
என்பதை இதுவரை கண்டதில்லை.
ஆனால்
என் நண்பனுக்காக
நட்பென்ற பூவாகவே
என்றும் மலர்வாய் நீ.
''ரஞ்சனி கேசவன்''
மேகம் யாரையும் எதிர்ப்பார்த்து
மழையை பெய்விப்பதில்லை .
அது போலவே
உன் நட்பும்.
காற்றில் அறியா இதம் போல
மலரில் வீசும் மணம் போல
உன் நட்பை உணர்ந்திருக்கிறேன்.
''கிஷோர்''
எங்கள் நட்பு சங்கிலியின்
முதல் வரி பயணம் -என்றும்
தன்னந்தனிமையில் உலவாடும்
எங்கள் அன்பின் தலைவன்.
மேகம் போல் மனம் இருந்தாலும்
வெளிக்காட்ட தெரியாது
போராடும் ஒரு வெண்புறா
''பார்த்தசாரதி''
என்னில் இடம்பிடித்த
கவின் மிகு
உதவி தோழன்.
பாசமென்ற கற்களால்
இதயத்தினுள் கட்டப்பட்டவன்.
மேகமென்ற துகள்களால்
எங்களை நீராக நனைப்பவன்.
''அகிலா''
இதுவரை
உன் நேர் கண்டதில்லை.
ஆனால்
உன்னை பற்றி வரிகள்
எழுதுகிறேன் என்று நினைக்காதே .
நட்பிற்கு வார்த்தைகள் முக்கியமல்ல.
பேசி கொண்ட உணர்வுகள் மட்டுமே.
''கவியரசன்''
நிலவும் நட்பும் ஒன்று தான்.
கரும்புள்ளிகள் இருந்தாலும்
என்றும் அழகு தான்.
விண்ணில் பிடிபட்ட
விண்மீன் போல
இசையில் சேர்க்கப்பட்ட
சுவரங்கள் போல
என்றும் நாம் பின்னபட்டிருகிறோம்.
நட்புக்கள் நன்றிகள் தேவையில்லை
இருந்தாலும் சொல்லுகிறேன்
நன்றி
கெளதம் இளங்கோ

பெண்மை

எதற்கடா இந்த பெண்மையை படைத்தாய் இறைவா.?

உற்றவன் தொடவேண்டிய பூவை
மற்றவன் கொய்தெடுக்க விடுவதற்க்கா ?

ஒரு திரௌபதிக்கு
உதவிக்கரம் நீட்டினீர்
ஆயிரம் திரௌபதிகள்
அலங்கோலம் ஆகிறார்கள் !!!!!
ஏனையா வரவில்லை
கரங்கள் போதவில்லையோ ???!!!!

வல்லமை வேண்டுமையா
வல்லமை வேண்டும்

பாம்பென வரும் பகைவனை
யானை போல் மிதித்து கொல்ல -இனியாவது எங்கள் பெண்டீர்களுக்கு வல்லமை வேண்டுமைய்யா..!

கௌதம் இளங்கோ.

எங்கே நம் சுதந்திரம்

எங்கே நம் சுதந்திரம்....?

பிறக்கும் முன்பே
பள்ளியில் விண்ணப்பம்
தவழும் தருவாயில்
கட்டாயக் கல்வி
நடக்கும் போதே நாட்டு நடப்பு
ஓடும் வயதில்
மதிப்பெண்களுடன் ஓட்டப் பந்தயம்……
எங்கே நம் சுதந்திரம்?

வாலிபம் வெறும் வணிகமயமாய்
காலையில் இரை தேடி
மாலையில் கூரை தேடும்
கூடுவிட்டு கூடு பாயும் பறவைகள்……..
சிட்டுக் குருவியின்
சுதந்திரம் உண்டா நமக்கு?

வேலையில் உன் கடமை
வாங்கிய கடனுக்காகவோ
தவறினால்
தாமதித்தால்
தட்டிக் கேட்க முடியுமா?
இல்லையே…..
தன்மானத்திடம் தலைக் குனிவு
இதுவோ சுதந்திரம்!

நாம் வாழும் பூமியருகில்
மனித பிண்டங்களாய்
ஓர் இனமே அழிகையில்
எந்திர பந்தங்களுடன்
உறவாடுகிறோம்
வாய் இருந்தும் ஊமையாய்
இல்லை…இல்லை…….
உயிரிருந்தும் மௌனியாய்????????
இதுவா சுதந்திரம்?

இறைவா மாற்றிவிடு
அனைவரையும்
காடுகளில் வாழும்
ஆதாமும் ஏவாளுமாக
அங்கேயாவது
சுதந்திரத்தை
சுவாசித்துக் கொள்கிறோம்


கௌதம் இளங்கோ

பெற்றுவிட்டோம் சுதந்திரம்

கண்ணீர் விட்டு வளர்த்த செடி,
தழைத்து வளர்ந்து மரமானது,
பலரின் உயிர் தியாகமானது,
காந்தியின் அஹிம்சை பலனானது,
சுதந்திரத்தை அடைந்துவிட்டோம் ,
அடிமைத்தளையிலிருந்து விடுபட்டோம்,
இப்போது இருப்பது சுதந்திரமா?

இது பெயர்தான் சுதந்திரமா?

சுதந்திரத்தின் தப்பான உபயோகமா?
அளவுக்கு மிஞ்சின சுதந்திரமா?
தன்னடக்கம் சுதந்திரம்
நாட்டுத்தொண்டு சுதந்திரம்,
தேசப்பற்று சுதந்திரம்
ஏமாற்றாத பிழைப்பு சுதந்திரம்
நாட்டில் இவைகள் எங்கே போயின?
உண்மையான அன்பு எங்கே மறைந்தன?
பழைய கண்ணியம் எங்கே?
அந்தக் கட்டுப்பாடு எங்கே?

வயதான கிழவர்,
கால் தேய நடக்கிறார்.
பென்சன் தொகைக்காக
அவர் காகிதம் வைத்த இடத்தில்,
மேலே நகர லஞ்சப்பணம் இல்லை,

சீட்டுக்கம்பெனியில் ஏமாற்றம்,
ஏழைகள் வயிற்றில் பெரிய அடி

நல்ல மதிப்பு பெற்ற இளைஞனுக்கு
லஞ்சம் கொடுக்க பண்மில்லை,
கல்லூரியில் இடமில்லை,

நாற்பது மார்க் எடுத்தவன் ,
டாக்டர் பட்டம் பெறுகிரான்

சுதந்திரத்தியாகிகள் குடிசையிலே,
கிடைத்த பதக்கத்தின் திருப்தியிலே,

சுதந்திரப்போரின் நினவினால்
வயிற்றின் பசியை நினைப்பதில்லை

மேல் நாட்டு மோகம் நாட்டினிலே,
உடைக் குறைவு முன்னேற்றம் பெண்களிலே,

சுயநலத்திற்குத் தலைவர்கள்,
பொது நலத்தை மறந்தார்கள்,

கீழ்படியிலிருந்து மேல்வரை
ஊழல் லஞ்சம் பரவி இருக்க,
தைரியம் இல்லை தட்டிக் கேட்க,

பெற்றோர்கள் முதியோர் இல்லத்திலே.
அவர்களின் மக்கள் மேலை நாட்டினிலே
சுதந்திரம் இதுவா பாரினிலே

எல்லாம் போலி தேசத்தினிலே,
மனம் வெம்பிப் போகிறேன்,
தன்னலமற்றத் தியாகிகளைத் தேடுகிறேன்,

சுதந்திரத்தின் உண்மைப் பொருளை,

இனி யார்தான் புரிய வைப்பாரோ....?
என்ற தேடலுடன்
கெளதம் இளங்கோ

சுதந்திர தினம்


பெரும்பானமையெனும் பேரிரைச்சலில் வெள்ளப்பெருக்கி­ன் வீரியமாய் அடித்துச் செல்லும் சிறுபான்மையின் பெருகுரல்...

ஒரு விடியலுக்கான காத்திருப்பில் அன்றாடம் வேர்வையாய் சிந்தும் உதிரத்துளிகள் கணக்கெடுப்பில் வருவதில்லை நிர்ணயித்த கொடைக்கூலியால்...

விலைவாசி அரக்கனின் கொடூரப்பசியில் குரல்வலை சிக்கி நசித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு கொண்டாட்டமாய் பேரில் மட்டுமே புழங்குகிறது இந்த சுதந்திர தினம்..

ஒரு விடியலுக்கு காத்திருப்பு முடிவுக்கென சில பிணக்காய் பல ஆரம்பத்திற்குஅகம் மகிழபொய்கள் புறவாழ்வு வெறுத்து மரணம் வாங்கி மனமகிழ்தல் வினாக்களோடு வீதி வலம் புறக்கணிப்பு தெளிதல் இழத்தல் உணர்தல் ஊழியம் போதும் இந்த பெருவாழ்வென ஒய்வெடுக்கும் போது விஸ்வரூபம் எடுக்கும் முதுமை என்னும் இயலாமை முடியும் வரை நிமிரவே நேரமின்றி முடிந்து போகிறது எங்கள் பிறவி இருந்தும் தன்னம்பிக்கை தளர்வதில்லை எங்களுக்கு வறுமை கோட்டை சற்று தளர்த்தி தான் ஓய்கிறோம் எங்கள் சந்ததிகளுக்கு கல்வியென்னும் களஞ்சியத்தை காட்டி..!


கெளதம் இளங்கோ

என் ஆசான் பாரதி இன்று இருந்திருந்தால்.....??????

என் ஆசான் பாரதி இன்று இருந்திருந்தால்.....??????

நான் கண்ட பாரதம்
நசுங்கி கிடக்க
நெஞ்சில் சுமையோடு
வீதி வழி வந்தேன்
சுதந்திர இந்தியாவை
வளம் பெற்ற இந்தியாவை
காணவந்த கருவிழியில்
ஊழல் பிசாசையும்
ஒழுக்கமற்ற அரசியல்வாதிகளையும்
ஒற்றுமை இல்லா மக்களையும்
காண்கையில், விழி இருந்தும் பயனில்லை பாரத மாதா!
தெருவெல்லாம் மரம் வாழ
அதை அண்டி மக்கள் வாழ
சிட்டு குருவி தினம் சிரித்த வீதி
வான் உயர கட்டிடங்கள் நிரப்புகையில்
மயானம் போல காட்சி அளிக்குதடி!
மக்களின், எம்மக்களின் நிலைகண்டு
என் ஆவியே தூக்கில் தொங்க துடிக்குதடி!!!!!!!!

கெளதம் இளங்கோ

ஒரு தேசியக்கொடியும் சில கட்சிக்கொடிகளும்...!!!

ஒரு தேசியக்கொடியும் சில கட்சிக்கொடிகளும்...!!!

சாதிகளும் மதங்களும்
கொலைக்கான
சுதந்திரத்தைக் கோருகின்றன..!

குடிதண்ணீர் கிடைக்காத
ஊர்களுக்கு மத்தியில்
மது
நதியாகி ஓடுகிறது..!

வங்கிக் கையிருப்பின்
அளவைப் பொறுத்து
மாறுபடுகிறது
பேரன்பும் பெருங்காதலும்..!

உழைப்புக்கு ஊதியம்
மறுக்கப்படும் உலகில்
களவுகள்
தங்களுக்கான சுதந்திரத்தை
தாங்களே..
கொண்டாடித் தீர்க்கின்றன..!

வரம்பு மீறிய
வன்முறையின் சுதந்திரத்தை
போர்கள் என்கிற
புனைப்பெயரில்
வரலாறு நெடுகிலும்
வாசிக்க முடிகிறது..!

எப்போதும் ஏழைகளுக்கு
எட்டாத உயரத்தில்
கட்சிக்கொடிகள்
காற்றில் படபடக்கின்றன..!

கொடிகளை..
மாற்றி ஏற்றுவதால்
கொண்டாடப்படுவதில்லை
சுதந்திர தினம்..!
கொள்கைகள் எப்போதும்
அரைக்கம்பத்தில் பறக்கின்றன..!

#கௌதம்இளங்கோ