Friday, 9 March 2018

மக்களும் மக்களாட்சியும்..!


மக்களின் தரத்துக்கு ஏற்றது போலே மக்களாட்சியும் அமையும்

சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மக்களாட்சியின் மாண்புகளைக் காக்க மக்கள் மன்றத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் செயல்பாடுகள் பற்றி தங்கள் குமுறல்களை எடுத்து வைத்தனர். அது மிகப்பெரிய அதிர்வலையை இந்தியாவில் குறிப்பாக கருத்தாளர்கள் மத்தியில் உருவாக்கியது. ஏனென்றால் இப்படி இதுவரை ஓர் நிகழ்வு இந்திய வரலாற்றில் நடந்தது கிடையாது. ஆகையால் இதுவரை உச்சநீதிமன்றத்தில் நடந்தது அனைத்தும் முறையாகத்தான் நடந்து வந்துள்ளது என்றும் பொருளல்ல.
இந்த ஊடகச் சந்திப்பு பற்றி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. உச்சநீதிமன்றம் கங்கை போன்றது, புனிதமானது, அங்கு நடந்தவைகளைப் பொதுவெளியில் கருத்துக் கூறியது அந்த நிறுவனத்தின் மதிப்பைக் குறைப்பதாகும். அது தவறு என்று ஒரு விவாதம் வைக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் வைப்பதன்மூலம் பொதுமக்கள் தீர்வுகண்டுவிடுவார்களா, இதைச் செய்திருக்கக் கூடாது என்றும் விவாதித்தனர். ஆனால் செய்தியாளர்களைச் சந்தித்த நீதிபதிகள் மக்களாட்சிக்கு நேரப்போகின்ற ஆபத்தை இந்தத் தேசத்திற்குத் தெரிவித்துவிட்டோம், மக்களிடம் விட்டுவிட்டோம் என்று முடித்துள்ளனர். இந்தச் செயலை ஆத்மாவிற்கு பதில் சொல்லும் விதமாக செய்து முடித்துள்ளனர். அவர்கள் மையப்படுத்தியது தனி நபரை அல்ல, உதாசீனப்படுத்தப்படும் ஜனநாயக நடைமுறைகளை.
இந்த இடத்தில் ஒரு பொதுப்புரிதலை ஜனநாயக நடைமுறைபற்றி நாம் புரிந்துகொள்வது மிக முக்கியமானது. ஜனநாயகத்தை இயக்கும் சக்தி என்பது ஜனநாயகத்தில் ஆளுகைக்கான அமைப்புக்கள். அது சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம், நிர்வாக அமைப்புக்கள், நீதிமன்றங்கள் எதுவாக இருந்தாலும், அவை அத்தனையும் புனிதமானவைதான். எப்பொழுதென்றால், அந்த நிறுவனங்கள் அனைத்தும் நியாயமாகவும், நேர்மையாகவும், நியதியுடனும், நீதிவழுவா நிலையில் நடந்து கொள்கின்றவரையில்தான். மேற்கூறியவை பின்பற்றப்படவில்லை என்றால் எதற்கும் புனிதத்துவம் கிடையாது.
தவறுகளை மறைப்பது புனிதத்துவம் ஆகாது. மறைப்பதுதான் புனிதத்துவத்தைக் கெடுக்கும் செயல். இந்த அமைப்புக்கள் செயல்பட உருவாக்கப்பட்ட விதிமுறைகளுக்கு மாறுபட்டு செயல்படாவண்ணம் பாதுகாத்துக்கொள்ள மூன்று அமைப்புக்களும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். இந்த அமைப்புக்கள் முழுச் சுதந்திரமாக செயல்படுவதன் மூலம்தான் பொதுமக்களைப் பாதுகாக்க முடியும். அதைத்தான் நாம் (Checks and ¡õalance) என்று அழைக்கின்றோம். இந்த அமைப்புக்கள் செயல்படுகின்ற விதத்தில் மக்களாட்சி நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். எந்த அமைப்பையும் வழிகாட்டு நெறிமுறைகளுக்குப் புறம்பாக வழிநடத்தினால் எதற்காக மக்களாட்சி உருவாக்கப்பட்டதோ, அந்தக் குறிக்கோள் தோற்றுப்போய்விடும். எந்த மக்களாட்சி அமைப்பிலும் தனி மனிதருக்கு என்று தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. அனைத்தும் அமைப்புக்குத்தான்.
அடுத்து மக்களாட்சி அமைப்புக்களில் உயர்ந்தது தாழ்ந்தது என்பது கிடையாது. பதவிகள் அனைத்தும் செயல்பாடுகளுக்காகவே கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் தொடங்கி நாட்டின் குடியரசுத்தலைவர் வரை அனைவருக்கும் செயல்பாடுகள் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த வரையறைகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றவரை நியாயத்தை எதிர்பார்க்க முடியும். அதுமட்டுமல்ல, எங்காவது ஒரு மன்றத்தில் தவறு நிகழ்ந்தால் அதை இன்னொரு மன்றம் சரி செய்துவிடும். இந்த ஜனநாயக அமைப்புக்கள் அனைத்தும் கூட்டுத்தலைமைக்கானதே. அதிகாரங்கள் என்பது அமைப்புக்கானதே தவிர தனிமனிதர்களுக்கானது அல்ல.
தனிமனிதர்களாக அதிகாரங்களைக் கையிலெடுக்க முடியாது. அமைச்சர்கள் இல்லை என்றால் பிரதம அமைச்சரோ அல்லது முதலமைச்சரோ முடிவுகள் எடுக்க முடியாது. அமைச்சர் முடிவு எடுக்கிறார் என்றால் இலாக்கா அல்லது துறைச் செயல்பாடுகளுக்கு விதிக்கப்பட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டுமே தவிர, அவர் நினைத்தவைகளை நடத்திட முடியாது. அப்படிச் செய்தால் அவர் சட்டச் சிக்கல்களுக்கு ஆட்பட்டு தவறு இழைக்க வேண்டி நேரிடும்.
தரமான விவாதங்கள் அவசியம்
பொதுவாக மக்களாட்சி நடைபெறுகிற நாட்டில் மன்றங்களின் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மை நிறந்ததாக இருக்க வேண்டும். அது நீதிமன்றத்திற்கும் பொருந்தும். அதேபோல் எவைகளுக்கெல்லாம் விவாதம் தேவைப்படுகிறதோ அந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் விவாதத்தின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டியது மக்களாட்சியை மெருகூட்டும் செயலாக இருக்கும். சிக்கல் நிறைந்தப் பிரச்சனைகளை கூட்டுத்தலைமையில் விவாதிப்பது, முடிவெடுப்பது என்பது மக்களைப் பாதுகாப்பதற்கு மட்டுமல்ல, மக்களாட்சியின் மேல் இருக்கும் நம்பிக்கையை மக்கள் மத்தியில் அதிகப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.
எனவே சிற்றூராட்சி மன்றத்தில் துவங்கி நாடாளுமன்றம் வரை பெரு விவாதங்களுக்காக வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த விவாதங்கள் கூட தரமானதாக அமைந்திட வழிவகை செய்யப்பட வேண்டும். இன்றைக்கு நாடாளுமன்றம் தொடங்கி, சிற்றூராட்சி வரை விவாதங்கள் என்பது சடங்குபோல் மாற்றப்பட்டுவிட்டன. அதுமட்டுமல்ல, செயல்படும் நாட்களும் குறைக்கப்பட்டுவிட்டன. செயல்பாடுகளிலும், விவாதங்களிலும் அறிவியல்பூர்வமான விவாதங்களுக்குப் பதில், பாராட்டுமன்றமாகவும் ஏச்சுமன்றமாகவும் இந்த விவாத ஜனநாயகத்தை தற்போது மாற்றி வருகிறோம். இவைகளெல்லாம் மக்களாட்சியைப் பலவீனப்படுத்தும் செயல்களாகும். இன்று இது நாடாளுமன்றத்தில் துவங்கி சட்டமன்றம், உள்ளாட்சி மன்றம் வரை வந்து, அது இன்று உச்சநீதிமன்றத்திற்கும் வந்துவிட்டது. இன்று இந்த விதிமீறல்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. அடிப்படையில் இந்தச் செயல்பாடுகள் மக்களாட்சியில் நம்பிக்கையற்ற தன்மையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
ஒரு கிராம சபைக் கூட்டத்தில்…
மக்களாட்சியில் விவாதமும் வெளிப்படைத்தன்மையும்தான் சமூகத்தில் நேர்மையையும், ஒற்றுமையையும், அமைதியையும் பாதுகாக்க உதவுகின்றன. இதற்கு ஒரு நிகழ்வை விளக்கினால் அனைவரும் விளங்கிக்கொள்ள ஏதுவாக இருக்கும். ஒரு கிராமத்தில் கிராமசபைக் கூட்டம் நடந்தது. தலைவர் அந்தப் பஞ்சாயத்தில் கையில் இருக்கும் நிதிநிலைமையையைக் கூறி, இருக்கும் நிதியில் என்னென்ன அத்தியாவசிய பணிகளை நாம் மேற்கொள்ளலாம் எனக் கேட்டு விவாதத்தைத் தொடங்கினார்.
அந்த ஊரில் பெரியதனக்காரர் ஒருவர் தன்னுடைய வேண்டுகோளை முன்வைத்தார். தாங்கள் வசிக்கும் பகுதிக்கு இன்னும் தார்சாலை போடவில்லை, நிறைய வீடுகள் கட்டப்பட்டு குடியேற்றங்கள் நடைபெற்றுவிட்டன. சாலை இல்லா கிராமம் என்று நம் ஊருக்கு பெண் எடுக்கக்கூட வேறு கிராமங்களிலிருந்து வருவதில்லை. இது ஒரு அடிப்படையான தேவை. அதை இந்த நிதியின்மூலம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அடுத்து ஒரு வயதான மூதாட்டி மெல்ல எழுந்தார். தான் வசிக்கும் பகுதி ஊரின் கடைகோடிப் பகுதி. அங்கு குடிதண்ணீர் கிடைப்பதில்லை. எனவே இந்தப் பணத்தை வைத்து எங்கள் பகுதிக்கு குடிதண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
அடுத்து ஒருவர் எழுந்து, அந்த அம்மா குடியிருக்கும் பகுதிக்கு குழாய் செல்கிறது, குடிநீரும் வருகிறது என்றார். அந்த வயதான மூதாட்டி “குழாய் இருப்பது உண்மைதான் ஆனால் தண்ணீர் வருவதில்லை. உண்மையை நீங்கள் அனைவரும் எங்கள் குடியிருப்புக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம்” என்றார். அவர் மேலும் சொன்னார்; “எங்கள் பகுதிக்கு யாருமே வருவதில்லை, ஆகையால்தான் எங்கள் வாழ்க்கைச் சூழல் என்ன என்பது புரியவில்லை” என்று கூறினார். உடனே பஞ்சாயத்துத் தலைவரை சிலர் பதில் கூறுமாறு வற்புறுத்தினர். பஞ்சாயத்துத் தலைவர் ஒரு பெண். அவர் பேசும்போது “அந்த ஊருக்கு குடிதண்ணீர் குழாய் பதித்தது உண்மை. ஆனால் தொடர்ந்து அங்கு நீர் வழங்க முடியவில்லை.
முதலில் முக்கிய தாய் கிராமங்களுக்குத் தண்ணீர் கொடுத்துவிட்டுத்தான் அங்கு கொடுக்க முயல்கிறோம். அவர்களுக்குத் தேவையான குடிநீரைத் தர இயலவில்லை” என்று கூறினார். இதைத் தொடர்ந்து தார்ச் சாலை அமைப்பதா அல்லது இந்தக் கிராமத்திற்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்து தருவதா, எதற்கு முன்னுரிமை வழங்குவது என்று விவாதம் நடைபெற்றுக்கொண்டே இருந்தது.
அந்த வயதான பெண்மணியும் விடுவதாக இல்லை. அவர் கடைசியாக ஒரு வேண்டுகோளை வைத்தார். “நாங்கள் அனைவரும் தாய் கிராமத்து குடியானவர்களின் வீடுகளிலும் வயல்களிலும்தான் வேலை செய்கின்றோம். காலையில் நேரத்தில் எழுந்து உங்கள் காடுகளுத்தான் வேலைக்குச் செல்கின்றோம். தண்ணீர் கிடைக்கவில்லை என்று உங்கள் தாய் கிராமத்திற்கு தண்ணீர் எடுக்க வந்தால், அனைவரும் வசைமொழியில் பேசி எங்களை அவமானப்படுத்துகின்றனர். இந்தச் சூழலைத் தவிர்க்கவேதான் நான் உங்களிடம் என்னுடைய வேண்டுகோளை வைக்கிறேன்” என்று பேசினார்.
உடனே தார்ச் சாலை தங்கள் குடியிருப்புக்கு வேண்டும் என பேசிய முதியவருக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் கேட்டார்; “ ஒரு பெண், அவரும் நம் வீடுகளில் வேலை செய்பவர் இவ்வளவு நேரம் மன்றாடிக் கேட்கிறார் குடிதண்ணீர் வேண்டும் என்று. இதை நாம் தொடர்ந்து விவாதம் செய்கிறோம், அதில் அவர் நியாயத்தை நாம் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை” எனக் கேட்டார். உடனே பஞ்சாயத்துத் தலைவி சொன்னார்; “தண்ணீர் வேண்டி பேசியவரின் நியாயத்தைப் புரிந்துகொண்டு இந்த அம்மையார் கூறிய கருத்துக்கள்தான் எனக்கும் நியாயமாகப்படுகிறது, அதற்காக சாலை தேவை இல்லை என்று நான் கூறவில்லை, அதுவும் முக்கியம்தான் ஆனால் தண்ணீரா சாலையா என்று பார்த்தால் தண்ணீர் சாலையைவிட அடிப்படை என்பதாகக் கருதுகிறேன். எனவே தண்ணீருக்காக முடிவை இந்தக் கூட்டத்தில் முடிவுசெய்து நிறைவேற்றிவிடுவோம். நம்மிடம் இருக்கும் இருப்புத்தொகையைப் பயன்படுத்தி. அதே நேரத்தில் சாலைக்கான தீர்மானத்தையும் நிறைவேற்றிவிடுவோம் இதே சபையில்; ஆனால் அந்த வேலையை நமக்கு அடுத்து நிதி கிடைக்கும்போது நிறைவேற்றிவிடுவோம்” என்று கூறி சம்மதத்தைக் கேட்டார். அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.
கூட்டம் முடிந்தபின் அந்த வயதான மூதாட்டியை அணுகி இவ்வளவு நேரம் விடாமல் தொடர்ந்து பேசி சாதித்துவிட்டீர்கள் என்று கேட்டபோது அவர் கூறியதுதான் விவாதத்தின் மாண்பை புலப்படுத்தியது. அவர் கூறினார். “நான் குடியிருக்கும் பகுதி தலித் மக்கள் வாழும் பகுதி. அங்கு தாய் கிராம மேல்சாதிக்காரர்கள் குப்பையைக் கொட்டுவார்களேயன்றி, எங்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தது கிடையாது. ஆனால் சாலை வேண்டி பேசிய பெரியவர் மகன் அமெரிக்காவிலிருந்து அனுப்பிய பணத்தில் கட்டிய பெரிய வீடு. அதேபோல் வெளிநாடு சென்று சம்பாதித்து பலர் அங்கு வீடுகட்டிவிட்டு ஒரு சாலையும் அமைத்துவிட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் தாய் கிராமத்தில் வீடுகள் உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட அந்தக் காலனிக்குத் தார்ச்சாலை கேட்கிறார்கள். அதற்காகத்தான் அந்தப் பெரியவர் சமூகக் காரணங்களைக் காட்டி சாலை வேண்டும் என்றார்.
அவர் கார் வாங்கப் போகிறார். இந்தப் பின்புலத்தில்தான் அவர் அழுத்தமாக விவாதத்தை வைத்தார். நான் இந்த உண்மையை அங்கே பேசினால் அது சாதிச்சண்டையாக மாறிவிடும். எனவேதான் என் நியாயத்தைத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டு வந்தேன். இந்தப் பஞ்சாயத்துத் தலைவி எங்களின் பெரும்பகுதி வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றவர். அத்துடன் சாதுர்யமாக முடிவெடுக்கக் கூடியவர். என்னைத் தொடர்ந்து பேச அனுமதித்து, எந்தப் பெரியவர் சாலை வேண்டும் என்று விவாதித்தாரோ அவரின் மனைவியே எனக்குச் சாதகமாக பேசியவுடன் அதைப் பயன்படுத்தி முடிவெடுத்துவிட்டார். அது மட்டுமல்ல, அவரின் கோரிக்கையையும் நிறைவேற்றிவிட்டார்” என்று கூறினார்.
இந்த நிகழ்வு நமக்கு ஒரு செய்தியைச் சொல்கிறது. விவாதம் என்பது புரிதலுக்கும், தெளிதலுக்கும், ஒற்றுமைக்கும் தேவையானது. அதை நாம் இன்று எல்லா இடங்களிலும் இழந்து வருகிறோம் என்பதை எப்போது உணரப்போகிறோம்..?

No comments:

Post a Comment