Thursday, 22 March 2018

மதுரையில் குளம் கண்மாய்களுக்கு கண்ணீர் அஞ்சலி

அழிக்கப்பட்ட நீராதாரங்களுக்கு அஞ்சலி 
======================================
நாணல் நண்பர்கள் சார்பாக மதுரையில் அரசால் அழிக்கப்பட்ட நீராதரங்களுக்கு கண்ணீர் அஞ்சலி  செலுத்தப்பட்டது. 
ஆக்கிரமிப்புகள், கட்டிடட கழிவுகள், மாநகராட்சி கழிவுகள் கலக்கும் சாக்கடையாக மாற்றப்பட்ட வைகை ஆற்றுக்கு முதலில் சருகுகள் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.


பிறகு ஆவின் பால்பண்ணையாக மாற்றப்பட்ட மதிச்சியம் கண்மாய், உலக தமிழ்ச் சங்கக் கட்டிடமாக,சட்டக்கல்லூரியாக, மாநராட்சி அலுவலகமாக மாற்றப்பட்ட தல்லாகுளம் கண்மாய், மாவட்ட நீதிமன்றமாக மாற்றப்பட்ட செங்குளம் கண்மாய், வருமான வரி அலுவலகமாக மாற்றப்பட்ட பீ.பீ.குளம் கண்மாய், மாவட்ட வருவாய் அலுவலர் குடியிருப்பாக மாற்றப்பட்ட புதூர் கண்மாய், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகமாக மாற்றப்பட்ட சம்பக்குளம் ஊரணி, பல்வேறு ஆக்கிரமிப்புகள் கழிவுகளால் அழிக்கப்பட்ட சாத்தையாறு, கிருதுமால் நதி, மாட்டுத்தாவணி பேருந்துநிலையம், பூ மார்கெட்டாக மாற்றப்பட்ட வண்டியூர் கண்மாய், எல்காட் தொழில்நுட்ப பூங்காவாக மாற்றப்பட்ட இலந்தைக்குளம் கண்மாய் இறுதியாக சென்னை உயர் நீதிமன்றமாக மாற்றப்பட்ட உலகனேரி கண்மாய் என மதுரையில் அரசால் அழிக்கப்பட்ட நீராதாரங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.








இந்த நீர்நிலைகள் தவிர மதுரையில் உள்ள மற்ற நீர்நிலைகள் எல்லாம் நன்றாக, உயிர்ப்போடு இருக்கிறது என்ற எண்ணத்திற்கு யாரும் வர வேண்டும். இது தவிர பிற எல்லா நீர்நிலைகளும் அழிந்து போகும் நிலையில்தான் இருக்கிறது. அஞ்சலி செலுத்த நேரமில்லாமல் போய்விட்டது. அடுத்த வருடம் அஞ்சலி செலுத்திக் கொள்வோம். கிரானைட் குவாரிகளால் மேலூர் பகுதியில் அழிக்கப்பட்ட 50கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு அஞ்சலி செலுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இதன் ஆணி வேறாக இருக்கும் ஏகாதிபத்தியமும், உலகமயமும், அதற்க்கு அடிபணியும் அரசுகளும், அதற்கேற்ற கொள்கைகளுமே வீழ்த்தப்பட வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று நீதிமன்றங்களால் உத்தரவிடப்பட்டு, அதன் பேரில் அரசு நிர்வாகத்தால் பாதுகாக்கப்பட்ட, சீரமைக்கப்பட்ட ஏதேனும் ஒரு நீர்நிலையை நம்மால் கைநீட்டி காட்ட முடியுமா? இனி யாரிடம்தான் நாம் போய் முறையிடுவது? இங்கு நீதிமன்றங்களே நீர்நிலைகளுக்குள் இருக்கிற போது நாம் என்னதான் செய்வது?


மிகப்பெரிய மழைநீர் சேகரிப்பு தொட்டியான நீர்நிலைகளை அழித்துவிட்டு, மழைநீரை சேமியுங்கள் என்று மக்களை வலியுறுத்துகிற அரசின் போக்கு ஒரு நகைமுரண். தொழிற்ச்சாலை மற்றும் நகராட்சி கழிவுகளை நீர்நிலைகளுக்குள் செல்வதை வேடிக்கை பார்க்கிற அரசாங்கம், நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டாதீர்கள் என்று மக்களை பார்த்து சொல்வது கொடுமையில்லையா? எல்லாவற்றுக்கும் மக்கள்தான் காரணம், அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்ற பிரச்சாரத்தை தொடர்ந்து பல தன்னார்வ அமைப்புகளை வைத்து செய்து கொண்டே இருக்கிறது. நீர் என்பது நமது உரிமை. அது ஒட்டுமொத்த உலக உயிரினங்களின் உரிமை. நீர் ஒரு விற்பனை பண்டமல்ல. மக்கள்தான் வரலாற்றை மாற்றுகிறார்கள். மக்கள்தான் வரலாற்றை படைக்கிறார்கள். இந்த உலகமய போக்கிற்கு எதிராக மக்களை ஒன்றிணைப்போம்..

No comments:

Post a Comment