Monday, 13 October 2014

சிரிக்க தெரியாத முகங்கள்

I சிரிக்கத் தெரிந்த
யாராவது இருக்குறீர்களா..??
இருந்தால் கொஞ்சம்
சிரித்துக் காட்டுங்கள்,
சிரிப்பை பார்த்து
நாளாகி விட்டது..!!
வீட்டின் மூலையில்
கண்ணாடியில் பூட்டிய
தாத்தா பாட்டியின் புகைப்படம்
சிரித்து தொங்குகிறது,
வெறும் பொய்யாக
புகைப்பட வெளிச்சத்திற்கு மட்டும்..!
எங்கேயோ கேட்கிறது
யாரோ சிரிக்கும் சத்தம்,
ஓடிப் போய் பார்த்தால்
சிரிப்புகளை விற்பனை செய்ய
விளம்பரம் தேடும் கூட்டம்..!!
சிரித்தால் நோய் விட்டுப்போகும்
என்பது உண்மையெனில்,
சிரித்து சிரித்து வரும்
வயிறு வலி என்பது
நோயாக எப்படி இருக்கும்..??
யாராவது எங்கோ சிரித்தால்
இனிமேல் உலகம் வியக்கும்
இவர் எந்த கிரக மனிதன்..??
கூடி அழும் உலகத்தில்
ஒருவரின் சிரிப்பு சப்தம்
என்றும் அதிசயமே..!!
கவலைகளைத் தேடி
கல்யாணம் செய்யும் போது,
சிரிப்பு மட்டுமென்ன
சிறப்பு விருந்தினராகவா வரும்..??
சில்லறை சிரிப்புகள் எங்கோ
சிதறி விட்டது...!!
சிரிக்க தெரியாத முகங்கள்
சிந்திக்க மறந்த
சிற்பங்கள்,
புன்னகை தொலைத்த
புழுக்கள்,
இறுகிய முகத்துடன்
இறந்துகொண்டே வாழ்பவர்கள்..!!

கெளதம் இளங்கோ 

எச்சமில்லாத எண்ணங்கள்

எப்போதும் தப்பிக்க
எதோ ஒரு காரணம்
எல்லோருக்கும் தேவை..!!
எதிர் பாராமல்
எதேச்சையாக
என்ன நடந்தாலும்
எதாவது சொல்லி
எட்டிப் போகிறோம்..!!
எப்படியெல்லாம்
எதிர்ப்பு வருமென
எச்சரிக்கை செய்தாலும்
எல்லைகள் கடக்கவே
எத்தனிக்கிறோம்..!!
எதிர்காலம் தீர்மானிக்க
எதுவும் வேண்டாம்..!!
எப்போதும்
எதுவும் எதிர்பாராத
எச்சமில்லாத
எண்ணங்கள் போதும்


கெளதம் இளங்கோ

வாடகை கனவு

கைவிடப்பட்ட 
கனவு ஒன்று 
என் சமீபத்திய நினைவுகளில் 
காட்சியாக வருகிறது..!! 

பச்சைப் பசேலென 
பாசி படர்ந்த 
நடை பாதையில் , 
அசட்டு சிரிப்புடன் 
கடந்து செல்கிறது அந்த 
கடந்த காலம்..!! 

உலர்ந்து போகும் 
முகத் திரைக்கும், 
வெளுத்துப் போகும் 
தலை முடிக்கும் 
முக்கால் பங்கு 
இடைவெளியில் தான் 
அந்த மூங்கில் நாட்கள் ..!! 

ஆங்காங்கே 
பாதரசம் உதிர்ந்த 
முகம் தெரியாத 
கண்ணாடி ஒன்று, 
கடந்த காலத்தை தின்று 
கர்வமாக ஏப்பம் விட்டிருந்தது..!! 

ஜன்னல் ஓரமாக 
காற்றில் ஆடியபடி 
பறந்து வரும் இலை, 
சருகாய் போகும் வரையுள்ள 
கால அளவு தான் 
விதியின் நாட்களுக்கும்....!! 

புரியாமையின் இந்த 
இருள் மூடிய இரவுகளை, 
அந்த வாடகைக் கனவு 
கண் திறந்து வைக்காமலே 
மர்மங்களுடன் 
நீண்டு சென்றது...

ஆயிரத்தில் ஒருவனாக

பல வருடங்கள் ஆகியும்
மனிதம் மாறவில்லை,அநியாயத்தை தட்டிக் கேட்க
ஆகாயத்தில் இருந்து
ஒருவன் குதிப்பான் என
அத்துமீறிய ஆசை..!!

வேடிக்கை பார்த்துப் பார்த்தே
வெக்கம் கெட்டுப் போன நமக்கு
வெளி உலகம் எப்படி போனாலும்
விட்டுக் கொடுத்து விடுவோம்..!!

கோபங்களை வைத்து வாயால்
கோபுரம் கட்ட தெரிந்த நமக்கு,கோபக் கனல் வீசி
கொல்லத் தெரியாது..!!

வித்தைகள் தேடிக் கற்று
வீரர்கள் ஆன நாமெல்லாம்
விலை போவோமே தவிர
விடுதலை கேட்க மாட்டோம்..!!

சினிமா பார்த்தே
சீரழிந்து போன நாம்,சீறிப் பாயத் தெரியாத
சிறுத்தைகள் ஆகி விட்டோம்!!

காலம் காலமாக
கதாநாயகன் மட்டுமே
தவறுகள் கண்டு
தட்டிக் கேட்க வருகிறான்..!!
கைதட்டும் நாம் எப்போது
கதாநாயகன் ஆவது..??

உசுப்பேற்றிப் பேசிப் பேசியே
ஆயிரத்தில் ஒருவனாக
யாரையோ ஆக்குவதற்குப் பதில்
நாமே ஆகி விடலாம்
ஆயிரத்தில் ஒருவனாக அல்ல,நம்மில் ஒருவனாக...!!

கெளதம் இளங்கோ 

என் இரண்டாம் பக்கம் ..!!

தாயின்
அரவணைப்பில்
தந்தையின்
கரம் பிடித்து
கவலையின்றி...

திறந்து கிடந்த
என் முதற்பக்கம்
மூடிய போது...

"நான்'
அறிமுகமானேன்..

நான்

விழித்தேன்
வெளிச்சம்
என்னுள் பரவியது.

நான்

சிரித்தேன்
நட்சத்திரங்கள்
கண்சிமிட்டின

நான்

அழுதேன்
அனுபவ பூக்கள்
மலர்ந்து
மணம் பரப்பின

நான்

உருவாக்கினேன்
என் சிறிய உலகை

நான்

அழித்தேன்
என் அறியாமையை

நான்

வீழ்ந்தேன்
அதனால்
எழுந்தேன்

நான்

பெற்றேன்
அதனால்
இழந்தேன்

இழப்பில்
இருப்பின் அருமையை
உணர்ந்தேன்

நான்

திறந்தேன்
வேதனை
வெளியில் போனது.

இதோ
என் இரண்டாவது பக்கம்
சற்றே
படபடக்கிறது

மூடிக்கொள்ளப்
பார்க்கிறது...
முடிவுரை
ஆரம்பம்!

முடிவில்லா கதையில்
சுவாரஸ்யமேது?

முதற்பக்கத்தின்
முன்னுரை
மனதில் இனிக்க

மூன்றாம் பக்க
முடிவுரை படிக்கும்
ஆவலில்

நான்
என் இரண்டாம் பக்கத்தில்...

கெளதம் இளங்கோ 

கடவுள் யார் பக்கம்...???

வழக்கமாக 
எப்போதும் பார்க்கிற 
கோவில்,
அன்று மட்டும் கொஞ்சம்
அதிக வேண்டுதல்களோடும்,
காணிக்கைகளோடும்
பரபரப்பாகவே இருந்தது...!!

ஒவ்வொரு
சனிப்பெயர்ச்சிக்கும்,
குருப் பெயர்ச்சிக்கும்,
இறைவனை விட
அதிக மகிழ்ச்சியடைபவர்
கோவில் பூசாரியாகத்தான்
இருக்கிறார்...!!

தட்டில் விழும்
துட்டுகள் பார்த்து
யாருக்கும் புரியாமல்
ராசியும்
நட்சத்திரமும் சொல்லி
அர்ச்சனை செய்தால்
ஆண்டவனுக்கு எப்படி புரியும்..??

அரசு அலுவலகமும்
ஆண்டவன் கோவிலும்
மக்களுக்கு ஒன்று தான்,
பணம் கொடுத்தால்
எல்லாம் நடக்குமென்ற
நம்பிக்கை அவர்களுக்கு...!!

இப்படியே போனால்
வனவாசம் போன 
இறைவனுக்கும்

பணவாசம் பிடித்துவிடும்..!!

எல்லோரையும் காக்க
இறைவன் போதும்,
ஆனால்
இறைவனைக் காக்க
பூட்டுக்கள் பூட்டிய
கோவில் வேண்டியிருக்கிறது..!!

இத்தனையும் பார்த்து
அமைதி காக்கும் அந்த
கடவுள் யார் பக்கமோ...??
கடவுளுக்காக ஏமாறும்
மக்கள் பக்கமா. .??
இல்லை
கடவுளை வைத்து ஏமாற்றும்
கயவர்கள் பக்கமா..??


கெளதம் இளங்கோ 

ஏழை சிறுமி

முகாரி ராகத்தின்
முகவரி
நான்... !
வறுமை என்னும்
வீட்டின் வாசற்படிகள்
நான்...!

மாடுபோல உழைத்தாலும்
ஐம்பது ரூபாய் தினக்கூலி
எனக்கில்லை... !

சிறுவர்களை வேலைக்கு
சேர்க்காதீர் என
அரசு சொல்கிறது...!

பள்ளிக்கு சென்றால்
பாலும் ரொட்டியும்
காலை எனக்குண்டு... !
எனக்கு
பால் கொடுத்தவள் வயிற்றில்
மூவேளை ஈரத்துண்டு...!

குடிகார அப்பனுக்கு
காசு கொடுக்க...

புது வரவான தங்கச்சிக்கு
பால் கொடுக்க...

எனக்கு பால் கொடுத்த
அன்னைக்கு சோறு கொடுக்க...!

என்னை விட்டால்
யாருமில்லை... !
நான் தான்
குடும்பத் தலைவி...!


கெளதம் இளங்கோ 

தாயின் மடி

யாரும் இல்லா 
தனியறையில் காய்ச்சலுடன் 
படுத்திருக்கையில் தான் 
புரிகிறது 
தாயின் மடி சொர்க்கமென்று 
அவள் கோதிவிடும் 
கரங்கள் தான் 
மருந்தென்று...

கெளதம் இளங்கோ 

எல்லாத்துக்கும் மேல....!!

இருந்தானோ ..??
இருக்கிறானோ ..??
இல்லை
இருக்கப் போகிறானோ..??
இதற்கு முன்னால் அவன்
இருந்திருந்தாலும்,
இனிமேல்
இருக்கமாட்டான்,
இவர்கள்
இருக்கவும் விடமாட்டார்கள்..!!
இல்லவே இல்லாத
இருந்தும் இல்லாத
ஒருவன்
இருந்தால் என்ன ,
இல்லாவிட்டால் என்ன ...??
அவனை
இருந்தபோது பார்க்கவில்லை,
இருக்கும் போது தேடவில்லை,
இருக்கப் போகும் போதும்
இருக்க விடப் போவதில்லை..!!
இல்லாத ஒருவனை
இருப்பது போல
இருக்க வைக்கவும்,
இருந்த ஒருவனை
இல்லாதது ஆக்கவும்
இங்கு மட்டும் சாத்தியமே...!!
யார் இருந்தாலும்
இல்லாமல் போனாலும்,
எல்லோரும் சொல்வது போல
எல்லாத்துக்கும் மேல
ஒருவேளை
அவன் இருப்பானோ...??

கெளதம் இளங்கோ இறைவன் இருக்கானோ..??

Wednesday, 10 September 2014

என் தாத்தா

நாளைய மகிழ்விற்காய் நடப்பைக் கொல்லும் - சாமானியர்
நடுவே
இருப்பதைக் கொண்டு மற்றோர் மனம் வென்ற என் தாத்தா
சிங்கராசு
பெயருக்கேற்றாற்போல் அப்படி ஒரு கம்பீரம்
நடையிலும் பேச்சிலும்
எதிரே வருகிற அனைவரும் கை கூப்பி வணங்கும்
போது தெரிகிறது – உன்
அருமையும் பெருமையும்

இன்றும் நினைவில் உங்களோடு இணைந்த
என் மழலைக்காலம்.....!!

அவிழும் காற்சட்டையை
இடது கையால் பிடித்துக் கொண்டு ...
வலது கையால் ...
தாத்தாவின் சுண்டு விரலை
பற்றிக் கொண்டு நடக்கையில்
திருவிழாவில் தங்கத்தேரை
நான் இழுத்து செல்வது போல் இருக்குமாம்

கைபிடித்து கடைத்தெருவிற்கு கூட்டிச்சென்று
வழியில் கேட்டதெல்லாம் வாங்கி தந்து
நான் மகிழ தான் மலர்வார்

காக்காதோப்பு திருவிழாவில்
எனை தங்கள் தோள்மீது ஏற்றி வைத்து
தெய்வதரிசனம் காண்பித்தீர்கள்
நானும் பார்த்தேன் – எங்களின்
தெய்வம் நீங்கலென்பதை மறந்து

எதற்கும் கலங்கா உங்கள் உள்ளம்
கலங்க கண்டேன்
சித்தப்பா இறந்த போது ...
எனை மடியிலமர்த்தி
துண்டால் முகம் பொத்தி
கோ ..வென அழுத காட்சி
இன்னும் என் மனக் கண்ணில் ...!
சித்தியின் வாழ்க்கை என்னாகும் என்ற
பயத்தின் வெளிப்பாடுதான்
அந்த அழுகையென
எனக்குப் புரிந்தது ...! 

நான் பிறந்ததிலிருந்து இன்று வரை
என் தீபாவளியும் பொங்கலும் தாத்தா
நீங்கள் எடுத்து கொடுத்த புத்தாடையில் தான்

நாங்கள் சந்தோசமாய் இருக்க – நீங்கள்
சம்பாரித்தது போக இன்று
நாங்கள் சம்பாரிக்கும் போது
நீங்கள் இல்லையே தாத்தா
ஏன் உங்கள் பேரன் படும் கஷ்டத்தை
காண கூடாது என்பதாலா....??

அரசுப்பேருந்தில் நீங்கள் செல்லும் போது
அனைவரும் உன்னை வணங்க - என் தாத்தா
என சொல்லும் போது எவ்வளவு பெருமையாக இருக்கும் தெரியுமா.

எங்கு சென்றாலும் கை பிடித்து
அழைத்து சென்றீர்கள்
இப்பொது மட்டும் ஏன்...!!

நீங்கள் இல்லை என்பதை இப்போதும்
நம்ப மறுக்கிறது எங்களின் மனது


நீங்கள் இறந்த செய்தி கேட்டு
நான் மனம் கலங்கி மதி மயங்கி
நிற்கையிலே
என் சுண்டு விரலை
யாரோ பற்றுவது போல
ஒரு உணர்வு
திரும்பி பார்த்தால் சிரித்தபடி
என் தாத்தா
அரூபமாக ...
நான் இருக்கேன் டா
என்பது போல ...!

ஜென்மங்கள் உண்டெனில்
ஓர் வரம் வேண்டுவேன்
வளர்ந்த குழந்தையுன்னை
என் குழந்தையாய் வளர்க்க

உலகில் ஏதேனும் ஈடாகுமா
சவரம் செய்யபடாத
நிறமிழந்த முகமுடியுடன்
என் தாத்தா தரும்
ஒற்றை முத்தத்திற்கு



கெளதம் இளங்கோ  

Wednesday, 30 July 2014

துரோகத்திற்கு நன்றி..............!

இனிமையான பொழுதொன்றில்....
திரும்பிப் பார்க்கும் போது,
ஏறிவந்த படிக்கட்டுகளாய் துரோகங்கள்,
எங்கோ தொலைவில்... 
கறுப்பு வெள்ளையாய்!
வலிகளை வழிகளாக்கி...
துரோகங்களை அனுபவங்களாக்கி...
வாழ்க்கையினை வண்ணங்களாக்க உதவிய...
துரோகங்களுக்கும்...
அதைப் பரிசாகத் தந்தவர்களுக்கும்,
ஒரு நன்றி சொல்லியே ஆகவேண்டும்!!!

பிழைக்க தெரிந்தவர்கள்...!!

பிழைக்க தெரிந்தவர்கள்...!!

வாய்ப்புக்காக
காத்திருக்கும் காலங்களில்
காலை வாறிவிட்டு
கரை சேரத் துடிக்கும்
நண்டுக் கூட்டங்கள் அவர்கள்...!!

நன்றாக
உற்று நோக்கினால்
நயவஞ்சக நோய் தாக்கிய
சல்லடை இதயம்
கொண்டவர்கள் அவர்கள்...!

எட்டிப் பார்க்கும்
நேரத்தில் ,
எட்டி மிதித்து
தட்டிப் பறிக்கும்
எட்டப்பனை மிஞ்சிய
எம தூதுவர்கள் அவர்கள்..!!

எறும்பு செல்லும்
பாதையிலும்
குழி தோண்ட நினைக்கும்
குள்ள நரியின்
குடும்ப உறுப்பினர்கள்
அவர்கள் ...!!

உருவான திறமைகளை
உறிஞ்சி எடுத்து
உயிர் வளர்க்கும்
உடல் திரண்ட
நஞ்சுப் பூச்சிகள் அவர்கள்..!!

அந்த அவர்கள் தான்
அடுத்தவன் தலையில்
மிளகாய் அரைத்து
உழைப்பைத் திருடி,
தொழில் நடத்தும்
பிழைக்க தெரிந்தவர்கள்...!!

கெளதம் இளங்கோ

மெய் எழுத்துக்கள்...!!

எனன பாவம செயததோ
இநத எழததுககள
திருமணம ஆகாமலே
இபபடி மெயயினறி
விதவைகளாகி நிறகினறன..!!

தமிழ மொழி கொணட
பெருமை சொலலவே,
மெயயிலலாமல
பொயயாக நிறகினறன
இநத எழுததுககள...!!

எநத மொழியும
எதிர காணாத பெருமை
எஙகள தாய தமிழுககு உணடு,
இது வெறும பேசசு மொழியலல,
உயிரின மூசசு மொழி...!!

உலகின மிக சிறநத
பேரழகி எஙகள தமிழ மொழி,
உசசரிககும போதே
நாவில எசசில ஊறும
தேனினும இனிய மொழி..!!

எழுதது பிழை இருநதாலும,
அழகில குறை சூழநதாலும
தனிததுவம வாயநது
தடம பதிபபது
எஙகள ஆதிகால தமிழ...!!

இஙகே தமிழ மொழியின
விநதை எனபது
மெயயெழுததிலலாமல
உயிரமெயயெழுததை
வாசிகக முடியும எனபதே...!!

ஒரு தமிழனால இதை
நிசசயமாக சரியாக
படிகக முடியும
எனற கரவததினால தான
தமிழ மொழி பெருமையை
உரககச சொலகிறேன..!!

Friday, 4 July 2014

என் தந்தை....

என் தந்தை....

1.எனக்கு ஐந்து வயது இருக்கும் போது,
அடிக்கடி தூக்கத்தில் அழுவேன்,
சினுங்குவேன்.தன் தூக்கம் களைந்து என் அருகில் அமர்ந்து தட்டிக் கொடுத்தார்.

2.பத்து வயது இருக்கும் போது தனக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை விட்டுக் கொடுத்து அவர் செலவைக் குறைத்துக் கொண்டு எனக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தினார்.

3.பதினெட்டு வயது இருக்கும் போது, இதுவரை உழைத்து சேமித்த எல்லாவற்றையும் என் பட்டப் படிப்பிற்காக இழந்தார்.

4.இருபத்திரண்டு வயது இருக்கும் போது , தன் மரியாதையை விட்டுக் கொடுத்து என் வேலைக்காக சிபாரிசு கேட்டு பலர் வீட்டுக் கதவுகளைத் தட்டினார்.

5.எல்லா தீபாவளிகளுக்கும் எனக்கு விலை உயர்ந்த ஆடைக் கொடுத்து அவர் மட்டும் "ஒரு சட்டை வாங்கினால் ஒரு சட்டை இலவசம் " கடையில் ஆடை எடுத்து அணிந்தார்.

6.எனக்கு வசதியான வாழ்க்கை தர அவர் மருத்துவ செலவுகளைக் கூட குறைத்துக் கொண்டார்.தன் உடல்நிலையை விட என் வாழ்க்கையில் அதிகம் அக்கறை காட்டினார்.

இன்று நான் பெற்றுவிட்ட எல்லாவற்றிற்கும் பின், எண்ணில் அடங்கா அவரின் இழப்பு இருக்கிறது.

என்னை சிலையாக்க தன்னை உளியாக்கி தியாகம் செய்த தாயுமானவர்
என் தந்தை..

எதற்காக எழுதினேன்...?

இதுவரை...

என்ன எழுதினேன்?
எதற்காக எழுதினேன்?
எழுதியவை
என்ன ஆயிற்று?

பின்னிரவில் பதுங்கும்
குற்றவாளியின்
அலையும் கண்களைப் போல
எதைத் தேடி
என் பேனா செல்கிறது...?

முன் தோன்றி
மூத்த தமிழின்
இலக்கண முகம்
அலங்கரித்து இருக்குமா?

தெருவோரம் திரியும்
எண்ணைப்பசை அற்ற
எண்ணற்ற குழந்தைகளில்
ஒருத்திக்காவது
தலை வாரிப் பூச்சூடி இருக்குமா?

எக்கணமும்
வறுமை தின்னும்
வயிற்றுக்கு
ஒரு வேளை
சோறு கிடைத்திருக்குமா?

எங்காவது ஒரு
சிட்டுக்குருவிக்கு
சிறகு முளைத்திருக்குமா?

எதிர்த்துப் போராடும்
எம் மாணவர்
ஏந்தும் பதாகையில்
எழுத ஒரு வாசகம்
கிடைத்திருக்குமா?

சொல்ல வாயும்
வார்த்தைகளும் அற்று
தவிக்கும் ஒரு இதயத்திற்கு
சொல்லும் வழியாகி
காதல் மொழியாகி இருக்குமா?

விரிந்து கொண்டிருக்கும்
ஓசான் ஓட்டைப் படலத்தின்
ஒரு துளி அடைக்க சமூகத்தை
முன்னெடுத்து இருக்குமா?

முகிழ்த்து
முன்னே வரத் துடிக்கும்
கைம்பெண் முன்
ஒப்பாரி வைப்பதைத் தவிர்த்து
அவள் கைப் பிடித்து
காலம் களிக்க ஒரு
நல் இதயம்
கிடைக்கச் செய்து இருக்குமா?

குறைந்த பட்சம்...
உழைத்துக் களைத்த
எம் பெரு மக்கட்கு
ஒரு துளி நேரம் பொழுது
போக்கக் கிடைத்திருக்குமா?

இருக்கும் விலைவாசியில்
இரண்டு சொட்டு மை ஒன்றும்
பெரிய செலவில்லை என்பதாலா...?
இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறேன்...

என் சபதங்கள்

  விடுமுறையாயினும் 
விடியல் முன் கண் விழிப்பேன். 
மார்கழி மாதத்திலும் கூட! 

பல் துலக்கியே பிறகே 
காபி அருந்துவேன். 
ஞாயற்று கிழமையும் கூட! 

குளித்தவுடன் குலதெய்வ 
வழிபாடு செய்வேன். 
அன்று ஏதொரு பிரச்சனைகள் 
இல்லை என்றாலும் கூட

கஷ்டப்பட்டாவது காலை உணவை 
கடவாயில் திணிப்பேன். 
அது உப்புசப்பின்றி இருந்தாலும் கூட! 

உயிரைக் கொடுத்தாவது 
உடற்ப் பயிற்சி மையம் செல்வேன். 
உயிர் நண்பன் வரவில்லை என்றாலும் கூட! 

மெனக் கெட்டாவது அலுவலகம் 
செல்வேன், குறித்த நேரத்தில். 
மேனேஜர் விடுப்பில் உள்ள போதிலும் கூட! 

கோழிக்கு பதில் பச்சை 
காய் கறிகள் உண்பேன். 
தலையில் கொம்பு முளைத்தாலும் கூட! 

வார வாரம் தண்ணி 
கொண்டு வண்டி துடைப்பேன். 
வண்டி வொர்க் ஷாப் சென்று 
வந்திருந்தாலும் கூட! 

தொலைக்காட்சியுடன் கொண்ட 
தொடர்பை துண்டிப்பேன். 
இன்டர்நெட் பழுதாய் இருந்தாலும் கூட! 

முகப் புத்தகத்தில் முங்கி முங்கி 
முத்தெடுக்க மாட்டேன். 
முல்லை பெரியாறு விவகாரம் முடிவுக்கு வந்தாலும் கூட! 

அறிவை பெருக்க தேடித் 
தேடி படிப்பேன். 
சுத்தமாக புரியவில்லை என்றாலும் கூட! 

தினந்தோறும் நடந்ததை 
டைரியில் பதிவு செய்வேன். 
அன்று முழுவதும் படுத்தே இருந்தாலும் கூட! 

முடிந்தவரை உண்மையே பேசுவேன். 
அலுவலகத்துக்கு லீவு 
கேட்கும் போது கூட! 

ஞாபகம் வரும்போதெல்லாம் 
காதலியிடம் அழகாய் இருகிறாய் என்பேன். 
பயமாய் இருந்தாலும் கூட! 

மிக முக்கியமாக, 
இந்த ஆண்டிலாவது எழுதிய 
இந்த காகிதத்தை தொலைக்காமல் 
பார்த்துக்கொள்வேன். 
கடைபிடிக்கவில்லை என்றாலும் கூட!!!