Friday, 4 July 2014

யாருமில்லாத பிறந்தநாள்

கண்ணாமூச்சி ரே..ரே...
காலம் இப்படித்தான்
இணைத்தது 
உன்னையும் என்னையும்..

அறிமுகம் வேறாயிருந்தாலும்
ஆழமான நட்புக்குத்தான்
வேர் விட்டேன்..

பொய்யும் புரட்டும்
சிறியதாய்..பாதகமில்லாமல்...
பொய்மையும் வாய்மையிடத்து..
வள்ளுவன் வாக்கை
உள்ளத்தில் வைத்தே
உன்னிடம் என் இதயத்தை
வைத்தேன்..

உன் இதயம் இரும்பால்
வடிக்கப்பட்டிருந்தால்
என் நட்பு நொறுங்கியிறுக்கும்..
நல்லவேளையாய்..
ஈரங்களின் மறுபதிப்பாய்..
மௌனங்களின் மொழியாய்..
பூக்களின் வாசமாய்..
ராகங்களின் ஸ்வரமாய்..
இப்படி இத(ய)மாய்
உன் இதயமிருந்ததால்
இன்று இனிய 
இத(மான)ய நண்பனாய் நீ..

இணைந்து பிறக்கவில்லை..
இதயங்கள் இணைந்தபின்
வருந்தவில்லை..

உன்னோடு குரல்சேர்த்து
நடைபோட்ட நாட்கள்
என்னை ஏங்கவைக்கின்றன
கரம்கோர்த்து நடவா தூரத்தில்
உ(எ)னை வைத்தபின்..

பறிமாறிக்கொள்ள
பல விஷயங்களிருந்தும்
பக்கமில்லாததால்
பரிதவிக்கிறது என் பரிதாப மனது..

வளமான உன் வாழ்க்கைக்கு
வழிசொல்ல வார்த்தைகளில்லை..
தோள்கொடுக்க தோளில்லாமலில்லை..

காலதேவனின்
காட்சிகள் சிலநேரங்களில்
கொடூரமாகத்தான்...
உன்னை கடல்கடத்தி
எங்கள் காலத்தை
கடத்த மறுக்கிறானே..

காதல் வெள்ளத்தில்
நீ நீந்துவதை
கண்டுமகிழ கண்கள்
காத்துக்கிடக்கின்றன...
உன் கனவுகளை
கலக்க கனிவாயொரு துணையில்லாமல்
கலங்குவாயென நினைக்கையில்
கண்ணீர் துளிகள்
கரைபுரளாமலில்லை..

உன் நிழலைக் காணாமல்
குரலால் இணைந்த கனம்
இன்றும் இதயத்தில்
இனிதாய் இம்சை செய்கிறது
இப்படி ஒரு உறவில்
கருவாகாமல் போயிருந்தால்
நம் நட்பு கள்ளமில்லாமல்
பிறந்து கண்ணியமாய் 
நடைபோட்டுக் கொண்டிருக்காதென
நினைக்கையில் கண்கள்
பனிக்க கரங்களை கூப்புகிறேன்
தொலைபேசியை நோக்கி...

உன் ஒவ்வொரு பிறந்தநாளும்
எனக்குள் இடியை இறக்குவதாய்..
ஆம்.. பிரிந்திருக்கும்
வருடங்களின் கணக்கில்
இன்னொன்றை 
இணைத்தால் தாங்குவதற்கு
இதயமென்ன இடிதாங்கியா?!!...

உனக்கு வாழ்த்துக்கள்
கூறப்போவதில்லை..
இன்றுமட்டும்
வாழ்த்துபவர்களுக்கு
இந்த நாளை நான் விட்டுவிடுவதால்..
உன்னை ஒவ்வொரு நாளும்
வாழ்த்தும் மனமாய் நானிருப்பதால்...

உனக்கு சிறப்பான வாழ்த்துக்கள்
கூறப்போவதில்லை..
சிறந்தவனாய் விளங்க வேண்டுமென
சிந்தையில் என்னாளும்
உன்னை சிந்தித்துக் கொண்டிருப்பதால்..

அருகிலிருந்தபோது
அலைகழித்தோம்
தொலைவில் போனபின்
தொங்குகிறோம்..
ஏங்கி ஏங்கி 
கண்கள் வீங்கவேண்டுமென
நம் நட்பு சாபமிட்டுவிட்டதுபோலும்..
ஆனாலும் 
அதற்கொரு நன்றி...
தொலைவில் உனை வைத்து
உறவுகள் இல்லாத நிலையில்
உனை தைத்து
எனை நினைக்கும் நிமிடங்களை
இன்னமும் கூட்டியமைக்கு....


சந்தோஷ தினத்தை
சாகடித்துவிட்டதாய்
உளறியிருந்தாய்..
சத்தம்போட்டு
நானழ உனக்கு விருப்பமா..

கலங்காதே நண்பா..
காலம் மாறும்
அடுத்தமுறை இணைவது
நம் கரங்கள்தாம்...

No comments:

Post a Comment