Tuesday, 22 May 2018

தமிழ்தேசிய தமிழ்’நாடு’ என்பது யாது..?!

ஈழம் என்பது எங்கோ கண்ணுக்கெட்டாத தூரத்தில் மிதந்து கொண்டிருக்கிற தீவு என்கிற எண்ணப்பாட்டிலிருந்து அதுவும் தமிழர் தாயகத்தின் ஒரு பகுதியே என்கிற நிலைப்பாட்டை தமிழ்நாட்டு தமிழர்கள் எடுத்திருப்பது உற்றுநோக்கப்படவேண்டியது...!!

இந்தியாவில் இருக்கிற எல்லா தேசிய இனங்களையும் விட சுயநிர்ணய உரிமை கோரக்கூடிய சாத்தியக்கூறுகளை அதிகம் பெற்றிருப்பது தமிழ்த்தேசிய இனம் மட்டும்தான்...!!

தமிழ்த்தேசியம் என்ற நெருப்பை தொடர்ந்து இந்தியம் எரியூட்டிக்கொண்டே இருந்தாலும் தமிழர்கள் சுயநிர்ணய உரிமை கோருவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது .

 ஏனென்றால் சுதந்திரத்திற்கு பிறகு வலுக்கட்டாயமாக ஒட்டப்பட்டிருக்கிற "இந்திய கருத்தியல்" ஏதாவது ஒரு தேசிய இனம் எழுச்சி பெற்றாலும் உடைந்து சுக்குநூறாகிவிடும்.

எல்லா தேசிய இனங்களுமே தனித்த சிறப்புகளை கொண்டிருந்தாலும் இந்தியாவை தவிர வேறு நாடுகளிலும் வாழ்கிற அதுவும் பொருளாதார,அரசியல் வலிமையோடு பரவி வாழ்கிற ஒரே தேசிய இன மக்கள் தமிழர்கள்...

ஒரு நாடாக தனித்தியங்கத்தேவையான அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யக்கூடிய சாத்தியக்கூறுகளை நூறு விழுக்காடு பெற்றிருப்பதும் தமிழர்களே...

*உட்கட்டமைப்பு மற்றும் நிர்வாகம்
*இராணுவம்
*பொருளியல் மற்றும் வேளாண் வளங்கள்
*அயல் நாடுகள் இடையேயான உறவு...

என்கிற தனித்தேசத்திற்கான அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடிய கட்டமைப்புகளை நாம் மட்டுமே பெற்றிருக்கிறோம்.

#உட்கட்டமைப்பு_மற்றும்_நிர்வாகம்:

ஒரு நாட்டை நிர்வகிக்க தேவையான அத்தனை நிர்வாகக்கட்டமைப்பையும் சாத்தியமாக்கி காட்டியிருக்கிறது "தமிழீழ அரசு".

நிதித்துறை,நீதித்துறை,கல்வி தொடங்கி ஆதரவற்றோர் காப்பகம் வரை அனைத்துக்குமே நடைமுறை உதாரணத்தை வைத்திருப்பது  நாம் மட்டும் தான்.

தமிழகத்துக்கான அத்தனை தேவைகளையும் தமிழர்கள் எதிர்கொள்கிற அத்தனை சிக்கல்களுக்குமான நடைமுறை சாத்தியத்தோடு கூடிய தீர்வுகளை(நாம்தமிழர் செயல்பாட்டு வரைவு) வைத்திருப்பதும் தமிழர்களான நாம் மட்டுமே தான்...!!

#இராணுவம்:
இந்தியாவில் இருக்கிற எல்லா தேசிய இனங்களும் விடுதலை என்றதும் எதிர்கொள்கிற சிக்கலான பாதுகாப்பு சிக்கல் கூட நமக்கு எழ வாய்ப்பில்லை.

முப்பதுக்கும் மேற்பட்ட வல்லரசு நாடுகளை எதிர்த்து நிற்கிற ஆற்றலை நாம் பெற்றிருந்தோம்...பெற்றிருக்கிறோம்..!!

இந்தியாவில் பல போராளிக்குழுக்கள் தேசிய இன விடுதலைக்காக போராடினாலும் நமக்கிருப்பதை போன்ற இராணுவ கட்டமைப்பை எந்த தேசிய இனங்களும் இதுவரை பெற்றிருக்கவில்லை.

#பொருளியல்_மற்றும்_வேளாண்_வளங்கள்:

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் கூறியது போல "இந்தியாவில் தமிழ்நாடும் கேரளாவும் தனித்தனி நாடுகளாக இருந்திருந்தால் உலக வல்லாதிக்க நாடுகளில் ஒன்றாக மாறியிருக்கும்"...என்கிற அளவுக்கு பொருளியல் வளங்களை நாம் மட்டுமே பெற்றிருக்கிறோம்.

கடல்வளம் என்கிற ஒற்றை வளத்தை உதாரணத்திற்கு எடு்த்தாலும் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு 1070 கிமீ கடற்பரப்பை தமிழர்கள்  கொண்டிருக்கிறார்கள்.

இதுபோல நீர்வளம்,நிலவளம் காட்டுவளம்,கனிமவளம் என எல்லா வளங்களோடு வேளாண்மையிலும் தன்னிறைவு பெற்று தனித்தியங்கக்கூடிய சாத்தியம் தமிழர்களான நமக்கு மட்டுமே உண்டு.

இந்த மண் உலகில் எங்கு விளைகிற பயிரையும் உள்வாங்கி ஏற்றுக்கொள்ளக்கூடிய மண்.

 ஆப்பிரிக்காவில் விளைகிற கோக்கோ முதல் சீனாவில் விளைகிற தேயிலை வரை இந்த மண்தான் ஏற்றிருக்கிறது.!!ஆக வேளாண் வளங்களையும் விளைபொருள் வளங்களையும் பெறுமதியான அளவு பெற்றிருப்பது நாம் மட்டும் தான்.

#அயல்நாடுகளிடையேயான_உறவு:

உலகம் முழுக்க எத்தனையோ தேசிய இனங்கள் பரவி பணம் வைத்திருந்தாலும்....நாம் மட்டுமே  உலகநாடுகளிலெல்லாம் அரசியலை வைத்திருக்கிறோம்.

ஏறுதழுவுதலுக்கான போராட்டமென்றாலும் சரி... நெடுவாசலுக்கான போராட்டமென்றாலும் சரி...உலகம் முழுக்க தமிழன் வாழ்கிற ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நகரிலும் "நாம் தமிழர்" என்கிற ஒற்றை குரல் எழுவதை நம்மால் மட்டுமே சாத்தியப்படுத்த முடிந்திருக்கிறது.

உலகம் முழுக்க அதிபர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும்,செனட்டர்களாகவும்,மாகாண ஆளுநர்களாகவும் உள்ள தமிழர்கள் மூலம் இனத்திற்கான சிக்கல்களை உலக அரங்கில் ஒலிக்க வைக்கக்கூடிய சாத்தியங்களும் வலிமையும் கூட நமக்கு மட்டுமே உண்டு.

இப்படி ஒன்றுக்கும் உதவாத "இந்தியக்கருத்தியலை" தர்க்கரீதியாக உடைக்கக்கூடிய வலிமை தமிழர்களுக்கு மட்டுமே உண்டு...!!

இந்த சாத்தியங்களோடு இன்னொன்றை இணைக்கவேண்டியிருக்கிறது...

ஈழத்துக்கும் தமிழகத்துக்குமான உறவை நிரந்தர உறவாக  மாற்றவேண்டியதும் கட்டாயமானதாகும்...!!

ஈழமும் தமிழகமும் திருமண உறவிலும் ஒன்றிணைய வேண்டும்..!!
❤❤❤

பதிவு : தினேஷ் அசோகன்

Saturday, 19 May 2018

"உயிரே உயிரே" ஈழ நாவல்

2009 ஆம் ஆண்டு ஈழத்தில்  நமது தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்ட போரின் இறுதி நேர நிகழ்வுகளையும் கொடூரங்களையும் கண்முன்னே சித்தரித்து காட்டும் இந்த நாவல்
இதன் ஆசிரியரான ஆனதி அவர்களுக்கு நமது சார்பில் நன்றி செலுத்துவோம்

கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

உயிரே உயிரே நாவல் pdf

Wednesday, 16 May 2018

பொறியியல் வேண்டாம்.!

தேர்வு முடிவுகள் வந்தாச்சு... எனன படிக்கணும்னு ஏற்கனவே முடிவு செஞ்சிருபிங்க அதுக்கு முன்னாடி நான் சொல்றதையும் கேளுங்க

ஒரு பொறியியல் படிச்ச மாணவனாக சொல்கிறேன் தயவுசெய்து மேல்நிலை படிப்புக்காக பொறியியல் கல்லூரியில் சேர வேண்டாம்
ஏன்னா 2040 ஆம் ஆண்டு வரைக்கும் தேவையான பொறியாளர்கள் தற்போது உள்ளனர்..

நன்கொடை கொடுத்து சேருமளவுக்கு நம் பெற்றோரிடம் பணம் இருக்கிறதா என்பதை கொஞ்சம் கருத்தில் கொள்க

இப்போ இருக்குறவனுக்கே வேலை இல்லாதப்போ இனிமே படிக்கிறவங்களுக்கு ஏது  வேலை..? அப்படியே வேலை கெடச்சாலும் 5000-8000 ரூபாய் தான் சம்பளம் குடுக்குறாங்க.. இதையும் கவனத்தில் கொள்க

இருந்தும் நான் பொறியியல் படிப்பேன் என்றால் தற்சார்பு (autonomous) கல்லூரிகளில் படியுங்கள் ஏனென்றால் அண்ணா பல்கலைக்கழகம் போன்ற கட்டுபாட்டு கல்லூரிகளில் படித்தால் படிப்புச்சுமை  காரணமாக நிகழ்ந்த தற்கொலைகளை கூகுள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

 தமிழகத்தில் மட்டும் தெருவுக்கொரு பொறியியல் கல்லூரிகலாய் மொத்தம் 600 கல்லூரிகளில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் நிலையில் அனைவருக்குமான வேலைவாய்ப்பை இந்த அரசு சாத்தியமாக்குமா../

பொறியியல் படித்தால் மட்டுமே சம்பாரிக்க முடியும் வாழ முடியும் என்ற கருத்தை மாற்றி கலை கல்லூரிகளிலும் விவசாய கல்லூரிகளிலும் இணைந்து நாடும் நாமும் முன்னேற பாடுபடுவோம்

5000 ரூபாய்க்கு அடுத்தவனிடம் அடிமையாய் வேலை பார்பதை விட ஒரு விவசாய கல்லூரியில் பட்டம் பெற்று நமது இயற்க்கை விவசாயத்தை எப்படி முன்னேற்றலாம் என்று ஆய்வு செய்து நம் சொந்த நிலத்தில் அதை பயிரிட்டு வளம்காப்போம் அதனால் நம் நலம் பெருகும்

நல்லதொரு  விவசாயத்தை நாம் பெற்ற அதே இயற்கையோடு நம் தலைமுறைக்கு பரிசளிப்போம்...!!


Monday, 14 May 2018

ஈழம் எனும் இரத்தகளம்...!!


இனம்
மொழி 
ஏகாதிபத்திய வெறியால்
வெடித்துச் சிதறி
நந்திக்கடலில் மிதக்கின்றன
மானுடத்தின் கைகளும் கால்களும்
உடல்களும் உணர்வுகளும்...

கொத்த ஒரு பசும் இலையுமின்றி
கண்களில் ரத்தம் கசியக்
காத்திருக்கின்றது
வெள்ளைபுறா...

வீசிச் சிரமறுத்த கத்திகளாலும்
வெடித்து சிதறும் குண்டுகளாலும்
துளைத்த துப்பாக்கி தோட்டாக்களாலும்
அசைக்க முடியவில்லை
அமைதியின் சிறகுகளை...!

#மே18

Sunday, 13 May 2018

Parasite எனப்படும் தமிழ் ஒட்டு சொற்கள்..



Parasite என்பது ஒட்டுண்ணி சொற்கள் எனப்படும். இந்த சொற்களைனைத்தும் வேற்றுமொழியிலிருந்து வந்து நம் தமிழ் சொற்களோடு ஒட்டி கலந்து நம் பேச்சு வழக்கில் தமிழ் சொற்களாகவே பிம்பம் பெற்றுவிட்டன.. 

நாம் பயன்படுத்தும் தமிழ்ச் சொற்களில் 80 சதவிகித சொற்கள் இந்த ஒட்டு வகையை சேர்ந்த வேற்றுமொழி  சொற்கள்..

எடுத்துக்காட்டாக
தயார், சிப்பாய், தாசில்தார்,சாவி போன்ற சொற்கள் பாரசீக மொழியைச் சேர்ந்தவை

உண்டியல், சிபாரிசு, பட்டுவாடா, பல்லக்கு, பஞ்சாயத்து, காகிதம், பேட்டி போன்ற சொற்கள் இந்தி மொழிச் சொற்களாகும்

சரக்கு, சொகுசு, நிம்மதி, வேடிக்கை, எச்சரிக்கை, சொந்தம் இவையனைத்தும் தெலுங்கு மொழி சொற்களாகும்..

இதுபோல
அகந்தை, அகதி, அகராதி, அகிம்சை, அஞ்சலி, அதிகாரி, அதிகாலை, அபாயம், அலங்காரம், அம்சம், அவசரம், அவதாரம், அவமானம், ஆசை, ஆசிர்வாதம், ஆதரவு, ஆபத்து, ஆயுள், ஆர்வம், இதயம், இச்சை, இரத்தம், இதிகாசம், உச்சம், உச்சரிப்பு, உதாரணம், உபதேசம், உபயம், உல்லாசம், எமன், ஏகாந்தம், ஐம்பூதம், ஔடதம், கடிகாரம், கடினம், கணிதம், கவனம், கவி, காயம், கிரகம், கீதம், குமரி, கேவலம், கோகிலம், கோடி, சகுனம், சக்தி, சகோதரி, சந்திரன், சபதம், சமாதி, சமம், சமுதாயம், சம்மதம், சௌபாக்கியம், சித்தர், சுத்தம், சுகம், சுலபம், சூரியன், சேவை, தனம், தத்துவம், தந்திரம், தனம், தியானம், தியாகம், திலகம், தினசரி, தீபம், தீவிரம், துரோகம், தைரியம், நடனம், நவீனம், நித்திரை, நிபுணன், நீதி, பக்தி, படம், பதவி, பாக்கியம், பாதம், பிரியம், பிரபஞ்சம், பிரமாண்டம், புராணம், பூமி, போதை, மகுடம், மது, மந்திரி, மரணம், மாத்திரை, மாமிசம், மேகம், யோசனை, ரதம், லீலை, வயசு, வாகனம், வாதம், வாலிபம், விசாலம், விசுவாசம், விதவை, விந்தை, வியாபாரம், வீதி,

இப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் அநேக சொற்கள் தமிழ் சொற்கள் அல்ல ஒட்டுண்ணி வகையை சேர்ந்தசொற்கள் அவைகளை கண்டறிந்து புறந்தள்ளுவோம் 

பிறமொழி கலவாது தமிழ் பேசி மகிழ்வோம்...! 

இந்த PARASITE வார்த்தைகளுக்கு இணையான தமிழ் சொற்கள் அறிய வேண்டுமெனில் பின்னூட்டமிடுங்கள் (Comments)

#தமிழறிவோம்