Monday, 13 October 2014

சிரிக்க தெரியாத முகங்கள்

I சிரிக்கத் தெரிந்த
யாராவது இருக்குறீர்களா..??
இருந்தால் கொஞ்சம்
சிரித்துக் காட்டுங்கள்,
சிரிப்பை பார்த்து
நாளாகி விட்டது..!!
வீட்டின் மூலையில்
கண்ணாடியில் பூட்டிய
தாத்தா பாட்டியின் புகைப்படம்
சிரித்து தொங்குகிறது,
வெறும் பொய்யாக
புகைப்பட வெளிச்சத்திற்கு மட்டும்..!
எங்கேயோ கேட்கிறது
யாரோ சிரிக்கும் சத்தம்,
ஓடிப் போய் பார்த்தால்
சிரிப்புகளை விற்பனை செய்ய
விளம்பரம் தேடும் கூட்டம்..!!
சிரித்தால் நோய் விட்டுப்போகும்
என்பது உண்மையெனில்,
சிரித்து சிரித்து வரும்
வயிறு வலி என்பது
நோயாக எப்படி இருக்கும்..??
யாராவது எங்கோ சிரித்தால்
இனிமேல் உலகம் வியக்கும்
இவர் எந்த கிரக மனிதன்..??
கூடி அழும் உலகத்தில்
ஒருவரின் சிரிப்பு சப்தம்
என்றும் அதிசயமே..!!
கவலைகளைத் தேடி
கல்யாணம் செய்யும் போது,
சிரிப்பு மட்டுமென்ன
சிறப்பு விருந்தினராகவா வரும்..??
சில்லறை சிரிப்புகள் எங்கோ
சிதறி விட்டது...!!
சிரிக்க தெரியாத முகங்கள்
சிந்திக்க மறந்த
சிற்பங்கள்,
புன்னகை தொலைத்த
புழுக்கள்,
இறுகிய முகத்துடன்
இறந்துகொண்டே வாழ்பவர்கள்..!!

கெளதம் இளங்கோ 

எச்சமில்லாத எண்ணங்கள்

எப்போதும் தப்பிக்க
எதோ ஒரு காரணம்
எல்லோருக்கும் தேவை..!!
எதிர் பாராமல்
எதேச்சையாக
என்ன நடந்தாலும்
எதாவது சொல்லி
எட்டிப் போகிறோம்..!!
எப்படியெல்லாம்
எதிர்ப்பு வருமென
எச்சரிக்கை செய்தாலும்
எல்லைகள் கடக்கவே
எத்தனிக்கிறோம்..!!
எதிர்காலம் தீர்மானிக்க
எதுவும் வேண்டாம்..!!
எப்போதும்
எதுவும் எதிர்பாராத
எச்சமில்லாத
எண்ணங்கள் போதும்


கெளதம் இளங்கோ

வாடகை கனவு

கைவிடப்பட்ட 
கனவு ஒன்று 
என் சமீபத்திய நினைவுகளில் 
காட்சியாக வருகிறது..!! 

பச்சைப் பசேலென 
பாசி படர்ந்த 
நடை பாதையில் , 
அசட்டு சிரிப்புடன் 
கடந்து செல்கிறது அந்த 
கடந்த காலம்..!! 

உலர்ந்து போகும் 
முகத் திரைக்கும், 
வெளுத்துப் போகும் 
தலை முடிக்கும் 
முக்கால் பங்கு 
இடைவெளியில் தான் 
அந்த மூங்கில் நாட்கள் ..!! 

ஆங்காங்கே 
பாதரசம் உதிர்ந்த 
முகம் தெரியாத 
கண்ணாடி ஒன்று, 
கடந்த காலத்தை தின்று 
கர்வமாக ஏப்பம் விட்டிருந்தது..!! 

ஜன்னல் ஓரமாக 
காற்றில் ஆடியபடி 
பறந்து வரும் இலை, 
சருகாய் போகும் வரையுள்ள 
கால அளவு தான் 
விதியின் நாட்களுக்கும்....!! 

புரியாமையின் இந்த 
இருள் மூடிய இரவுகளை, 
அந்த வாடகைக் கனவு 
கண் திறந்து வைக்காமலே 
மர்மங்களுடன் 
நீண்டு சென்றது...

ஆயிரத்தில் ஒருவனாக

பல வருடங்கள் ஆகியும்
மனிதம் மாறவில்லை,அநியாயத்தை தட்டிக் கேட்க
ஆகாயத்தில் இருந்து
ஒருவன் குதிப்பான் என
அத்துமீறிய ஆசை..!!

வேடிக்கை பார்த்துப் பார்த்தே
வெக்கம் கெட்டுப் போன நமக்கு
வெளி உலகம் எப்படி போனாலும்
விட்டுக் கொடுத்து விடுவோம்..!!

கோபங்களை வைத்து வாயால்
கோபுரம் கட்ட தெரிந்த நமக்கு,கோபக் கனல் வீசி
கொல்லத் தெரியாது..!!

வித்தைகள் தேடிக் கற்று
வீரர்கள் ஆன நாமெல்லாம்
விலை போவோமே தவிர
விடுதலை கேட்க மாட்டோம்..!!

சினிமா பார்த்தே
சீரழிந்து போன நாம்,சீறிப் பாயத் தெரியாத
சிறுத்தைகள் ஆகி விட்டோம்!!

காலம் காலமாக
கதாநாயகன் மட்டுமே
தவறுகள் கண்டு
தட்டிக் கேட்க வருகிறான்..!!
கைதட்டும் நாம் எப்போது
கதாநாயகன் ஆவது..??

உசுப்பேற்றிப் பேசிப் பேசியே
ஆயிரத்தில் ஒருவனாக
யாரையோ ஆக்குவதற்குப் பதில்
நாமே ஆகி விடலாம்
ஆயிரத்தில் ஒருவனாக அல்ல,நம்மில் ஒருவனாக...!!

கெளதம் இளங்கோ 

என் இரண்டாம் பக்கம் ..!!

தாயின்
அரவணைப்பில்
தந்தையின்
கரம் பிடித்து
கவலையின்றி...

திறந்து கிடந்த
என் முதற்பக்கம்
மூடிய போது...

"நான்'
அறிமுகமானேன்..

நான்

விழித்தேன்
வெளிச்சம்
என்னுள் பரவியது.

நான்

சிரித்தேன்
நட்சத்திரங்கள்
கண்சிமிட்டின

நான்

அழுதேன்
அனுபவ பூக்கள்
மலர்ந்து
மணம் பரப்பின

நான்

உருவாக்கினேன்
என் சிறிய உலகை

நான்

அழித்தேன்
என் அறியாமையை

நான்

வீழ்ந்தேன்
அதனால்
எழுந்தேன்

நான்

பெற்றேன்
அதனால்
இழந்தேன்

இழப்பில்
இருப்பின் அருமையை
உணர்ந்தேன்

நான்

திறந்தேன்
வேதனை
வெளியில் போனது.

இதோ
என் இரண்டாவது பக்கம்
சற்றே
படபடக்கிறது

மூடிக்கொள்ளப்
பார்க்கிறது...
முடிவுரை
ஆரம்பம்!

முடிவில்லா கதையில்
சுவாரஸ்யமேது?

முதற்பக்கத்தின்
முன்னுரை
மனதில் இனிக்க

மூன்றாம் பக்க
முடிவுரை படிக்கும்
ஆவலில்

நான்
என் இரண்டாம் பக்கத்தில்...

கெளதம் இளங்கோ 

கடவுள் யார் பக்கம்...???

வழக்கமாக 
எப்போதும் பார்க்கிற 
கோவில்,
அன்று மட்டும் கொஞ்சம்
அதிக வேண்டுதல்களோடும்,
காணிக்கைகளோடும்
பரபரப்பாகவே இருந்தது...!!

ஒவ்வொரு
சனிப்பெயர்ச்சிக்கும்,
குருப் பெயர்ச்சிக்கும்,
இறைவனை விட
அதிக மகிழ்ச்சியடைபவர்
கோவில் பூசாரியாகத்தான்
இருக்கிறார்...!!

தட்டில் விழும்
துட்டுகள் பார்த்து
யாருக்கும் புரியாமல்
ராசியும்
நட்சத்திரமும் சொல்லி
அர்ச்சனை செய்தால்
ஆண்டவனுக்கு எப்படி புரியும்..??

அரசு அலுவலகமும்
ஆண்டவன் கோவிலும்
மக்களுக்கு ஒன்று தான்,
பணம் கொடுத்தால்
எல்லாம் நடக்குமென்ற
நம்பிக்கை அவர்களுக்கு...!!

இப்படியே போனால்
வனவாசம் போன 
இறைவனுக்கும்

பணவாசம் பிடித்துவிடும்..!!

எல்லோரையும் காக்க
இறைவன் போதும்,
ஆனால்
இறைவனைக் காக்க
பூட்டுக்கள் பூட்டிய
கோவில் வேண்டியிருக்கிறது..!!

இத்தனையும் பார்த்து
அமைதி காக்கும் அந்த
கடவுள் யார் பக்கமோ...??
கடவுளுக்காக ஏமாறும்
மக்கள் பக்கமா. .??
இல்லை
கடவுளை வைத்து ஏமாற்றும்
கயவர்கள் பக்கமா..??


கெளதம் இளங்கோ 

ஏழை சிறுமி

முகாரி ராகத்தின்
முகவரி
நான்... !
வறுமை என்னும்
வீட்டின் வாசற்படிகள்
நான்...!

மாடுபோல உழைத்தாலும்
ஐம்பது ரூபாய் தினக்கூலி
எனக்கில்லை... !

சிறுவர்களை வேலைக்கு
சேர்க்காதீர் என
அரசு சொல்கிறது...!

பள்ளிக்கு சென்றால்
பாலும் ரொட்டியும்
காலை எனக்குண்டு... !
எனக்கு
பால் கொடுத்தவள் வயிற்றில்
மூவேளை ஈரத்துண்டு...!

குடிகார அப்பனுக்கு
காசு கொடுக்க...

புது வரவான தங்கச்சிக்கு
பால் கொடுக்க...

எனக்கு பால் கொடுத்த
அன்னைக்கு சோறு கொடுக்க...!

என்னை விட்டால்
யாருமில்லை... !
நான் தான்
குடும்பத் தலைவி...!


கெளதம் இளங்கோ 

தாயின் மடி

யாரும் இல்லா 
தனியறையில் காய்ச்சலுடன் 
படுத்திருக்கையில் தான் 
புரிகிறது 
தாயின் மடி சொர்க்கமென்று 
அவள் கோதிவிடும் 
கரங்கள் தான் 
மருந்தென்று...

கெளதம் இளங்கோ 

எல்லாத்துக்கும் மேல....!!

இருந்தானோ ..??
இருக்கிறானோ ..??
இல்லை
இருக்கப் போகிறானோ..??
இதற்கு முன்னால் அவன்
இருந்திருந்தாலும்,
இனிமேல்
இருக்கமாட்டான்,
இவர்கள்
இருக்கவும் விடமாட்டார்கள்..!!
இல்லவே இல்லாத
இருந்தும் இல்லாத
ஒருவன்
இருந்தால் என்ன ,
இல்லாவிட்டால் என்ன ...??
அவனை
இருந்தபோது பார்க்கவில்லை,
இருக்கும் போது தேடவில்லை,
இருக்கப் போகும் போதும்
இருக்க விடப் போவதில்லை..!!
இல்லாத ஒருவனை
இருப்பது போல
இருக்க வைக்கவும்,
இருந்த ஒருவனை
இல்லாதது ஆக்கவும்
இங்கு மட்டும் சாத்தியமே...!!
யார் இருந்தாலும்
இல்லாமல் போனாலும்,
எல்லோரும் சொல்வது போல
எல்லாத்துக்கும் மேல
ஒருவேளை
அவன் இருப்பானோ...??

கெளதம் இளங்கோ இறைவன் இருக்கானோ..??