மூன்றாம் உலகப்போர் மூளுமா.??
ஏனையோரின் கேள்விக்கு பதில் இதோ..
டொனால்ட் ட்ரம்பிற்கு தேர்தலுக்கான நேரமும்,
ஈரானுக்கு மக்களமைதிக்கான நேரமும்..
ஐந்து நாட்களுக்குள் அகிலமே மத்திய கிழக்கினை நோக்கியிருந்தது. ஒருவித போர்ப்பதற்றம். ஆனால் அமெரிக்க பெருங்கப்பல்களும், அதன் சார்பு நாடுகளின் ஆயுத வளங்களும் மத்திய கிழக்கு நோக்கி பெரியளவில் நகர்த்தப்பட்டிருக்கவில்லை. அமெரிக்க பாராளுமன்றிலும் அனுமதி கோருகை இடம்பெற்றிருக்கவில்லை. எனவே ஈரான் மீதான போரினைத் தொடக்குவதற்கு அமெரிக்கா முழுமூச்சாய் இறங்கியிருக்கவில்லை. ஈரானும் எந்தவொரு இஸ்லாமிய தேசத்தினதும் சார்பின்றி தனித்திருந்து உலக வல்லரசோடு மோதுவதற்குத் தயாரில்லை. இங்கே 'சண்டித்தனம்' மாத்திரமே மேலோங்கி நின்றது. தவிரவும் அமெரிக்கா தனது புலனாய்வு வல்லமையை தெட்டத் தெளிவாக நிரூபித்தது.
ஈரானின் 'அல் குட்ஸ் சிறப்புப் படையணி' தளபதி ஜெனரல் ஹாசிம் சுலைமானி 2020 ஜனவரி 03 அன்று ஈராக்கின் பக்தாத் விமானத் தளத்திலிருந்து வாகனமூடாக வெளியேறுகையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தினூடான உரொக்கட் தாக்குதலில் கொல்லப்பட்டார். இது ஈரானின் முக்கிய இராணுவ வள இழப்பு. ஈரானின் ஜனாதிபதியாக பலர் வரலாம். அது தேர்தலூடாக இடம்பெறுவது. ஆனால் போரியல் நுணுக்கமுள்ள இராணுவ அனுபவமுள்ளவர்களை இழப்பது அவசரமாக ஈடுசெய்ய இயலாதது.
இவ்விடத்தே காணவேண்டிய சில முக்கிய செய்திகளாவன.
1. ஜெனரல் ஹாசிம் சுலைமானி கொல்லப்பட்டது ஈரானிற்கான உளவியல் அடி.
2. இனி ஈரானில் தலைமை வகிக்கும் எத்தளபதிகளும் அமெரிக்காவுடனான பகைப்பில் தடுமாறும் நிலை.
3. பெருந்தளபதி ஒருவரை இத்தனை துல்லியமாக இலக்கு வைக்கும் அளவிற்கு அமெரிக்கா அல்லது இஸ்ரேலிய புலனாய்வு வல்லமை.
ஆகவே ஹாசிம் சுலைமானி மீதான குழுவினர்கள் பலியானமை ஈரானுக்கு அச்சத்தையும், அமெரிக்காவிற்கு துணிச்சலையும் கொடுத்தது எனலாம்.
மறுபுறம் இதற்குப் பதிலடியாக ஈரான் நடாத்திய ஏவுகணைத் தாக்குதல். 2020 ஜனவரி 08இல் ஹாசிம் சுலைமானியின் இறுதி வணக்க நிகழ்வு முடிந்த பின்னே, அமெரிக்கப் படையினர் நிலைகொண்டிருந்த ஈராக்கில் அமைந்துள்ள அன் அல் ஆசாத் விமானத்தளம் மீது ஈரான் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியது. இது ஈரானின் துணிச்சல் என்று சொல்வதை விடவும், தன்னை நிரூபிக்கவும் மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கவுமான ஒரு தாக்குதல் எனலாம். ஈரான்கூட இதுபற்றி வீம்பாகப் பேசாமல் ஐ.நா.சாசனப்படியான தற்பாதுகாப்பு நடவடிக்கை என்றது. ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி பக்குவமாகவே அறிக்கையிட்டார். அதைவிட இப்படியான கணக்கற்ற ஏவுகணைளை வீசுவதிலும் புலனாய்வு சார் நுணுக்கங்களுடன் அமெரிக்காவின் முக்கிய நபர்கள் மீது அல்லது தெளிந்த இலக்குமீது தாக்குதல் நடாத்தியிருப்பின் அதுவே இராணுவ வளர்ச்சியின் குறியீடாகும். தவிரவும், தமது ஈராக்கிய இலக்குகள் மீதான தாக்குதலை அமெரிக்கா எதிர்பார்த்ததுதான். இராணுவ உச்சம் பெற்ற ஒரு வல்லரசு ஏவுகணைகள் புறப்படும்போதே அது பற்றிய எச்சரிக்கை கொண்டிராதா? கழுகுப் பார்வைகொண்டு சுற்றித்திரியும் அமெரிக்க செய்மதிகளும், இஸ்ரேலிய மொசாட்டும் இத்தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிய வாய்ப்பு இருந்துள்ளதால் அமெரிக்க துருப்புகள் தற்பாதுகாப்பு கொண்டிருக்கவே வாய்ப்புகள் அதிகம். இதைவிட ஈரான் ஏவிய அத்தனை ஏவுகணைகளையும் ஒருசேரப் பொருத்தினால் வரும் வலுவிலும் அதிக வலுகொண்ட தனி ஏவுகணைகள் அமெரிக்கா வசமுள்ளன. ஆயினும் அமெரிக்கா பதிலடியைத் தவிர்த்தது.
இதனிடையே 'பட்ட காலிலே படும்' என்பதாய் ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து உக்ரைனுக்கு கிளம்பிய 'போயிங் 737' இரக விமானம் விழுந்து நொறுங்கி 180 வரையான மக்கள் பலியாகினர். இவர்களில் 80 பேர்கள் ஈரானியர்கள். ஜெனரல் ஹாசீம் சுலைமானியின் இறுதி வணக்க நிகழ்வின் நெரிசலில் 50 வரையான ஈரானியர்கள் பலியானதாக செய்திகள் வெளியாகின. ஆக ஈரானுக்குள் எதிர்பாரா மரண ஓலங்கள். வல்லரசு ஒன்றோடு ஊடகங்கள் எழுதுவது போல பொங்கி எழுந்து யுத்தம் தொடங்க முடியாது. அதுவும் அமெரிக்கா என்றால் அரபுலகில் போரிடும் அந்தத் தேசம் மட்டுமே மாட்டிக்கொள்ளும். மற்றவர்கள் வாய் திறவார்கள். ஈராக் மீதான போரிலும் இதுவே நடந்தது.
1967இல் எகிப்து, சிரியா, யோர்தான் சேனைகளோடு ஈராக், சவூதி அரேபியா, பலஸ்தீனம் உள்ளிட்ட பத்து நாடுகளின் துணையோடு இஸ்ரேலை துவம்சம் செய்யப் புறப்பட்ட அரபுலகை இஸ்ரேல் தனியாக சமாளித்தது. அத்தனை தேசங்களும் இஸ்ரேலிடம் மண்டியிட்டன. அப்போதே இஸ்ரேலிடம் அப்படியான வலிமை இருந்துள்ளது. இப்போது அதன் நுட்பம் வேறு வகை. அமெரிக்காவுக்கு எதிரான யுத்தம் என்பது இஸ்ரேலுக்கும் எதிரான யுத்தமே. ஆக ஈரான் பெருயுத்தத்தை சண்டித்தனமாக ஆரம்பிக்க விரும்பவில்லை. ஈரான் மக்களும் அதற்கு ஆயத்தமில்லை. விருப்புமில்லை.
அமெரிக்க பட்டியலில் ஈரானை விழவைப்பது உள்ளது. ஆனால் அதனை உடனடி பெரு யுத்தமாக மாற்ற டொனால்ட் ட்ரம்ப் விரும்பமாட்டார். 2016 நவம்பரில் ஜனாதிபதியான ட்ரம்ப் 2020இல் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை சந்திக்கவுள்ளார். யுத்தமொன்றுக்கு ஓராண்டுக்கு மேற்பட்ட நீட்சி தேவை. எனவே மத்திய கிழக்கில் ஈராக்கினை விட வலிமையான தேசமொன்றோடு மோதுவதற்கு அமெரிக்காவைப் பொருத்தவரை இது உகந்த சூழல் அல்ல. திருமண நாளில் ஒரு வீட்டார் இன்னுமொரு நிகழ்வை நினைக்கவே மாட்டார்கள். அதற்கொத்ததே இது. அமெரிக்கத் தேர்தல் பரபரப்பு தொடங்கும் நிலையில் டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சியும் இதனை அவ்வளவு எளிதாக விரும்பாது. செப்டெம்பர் 11 போன்ற நெருக்கடி நிலை ஈரானூடு வராததால் பெரும்பான்மை அமெரிக்கர்களும் ஈரான் போரில் ஆசை கொண்டாரில்லை. எனவே ட்ரம்ப் தனது ஊடக சந்திப்பை கெளரவம் குறையாதபடியும், யுத்தத் தவிர்ப்பை பக்குவமாகவும் விளக்கினார்.
ஆகவே, ஈரானுக்கு 'மக்கள் அமைதி' தேவையும், அமெரிக்காவுக்கு 'மக்கள் அனுமதி' தேவையும் உள்ளது. இதனால் ஈரான் அமெரிக்கா பெருயுத்த வாய்ப்பு தவிர்ப்பாகி இருக்கலாம். ஆனால் இதனைக் கடந்து யுத்தமே வேண்டும் என ஈரான் அமெரிக்கத் தலைவர்கள் அத்தனை இலகுவில் முடிவெடுக்க முடியாது.
நன்றி..