Thursday, 9 January 2020

மூன்றாம் உலகப் போர்

மூன்றாம் உலகப்போர் மூளுமா.??
ஏனையோரின் கேள்விக்கு பதில் இதோ..
டொனால்ட் ட்ரம்பிற்கு தேர்தலுக்கான நேரமும், 
ஈரானுக்கு மக்களமைதிக்கான நேரமும்..

ஐந்து நாட்களுக்குள் அகிலமே மத்திய கிழக்கினை நோக்கியிருந்தது. ஒருவித போர்ப்பதற்றம். ஆனால் அமெரிக்க பெருங்கப்பல்களும், அதன்  சார்பு நாடுகளின் ஆயுத வளங்களும் மத்திய கிழக்கு நோக்கி பெரியளவில் நகர்த்தப்பட்டிருக்கவில்லை. அமெரிக்க பாராளுமன்றிலும் அனுமதி கோருகை இடம்பெற்றிருக்கவில்லை. எனவே ஈரான் மீதான போரினைத் தொடக்குவதற்கு அமெரிக்கா முழுமூச்சாய் இறங்கியிருக்கவில்லை. ஈரானும் எந்தவொரு இஸ்லாமிய தேசத்தினதும் சார்பின்றி தனித்திருந்து உலக வல்லரசோடு மோதுவதற்குத் தயாரில்லை. இங்கே 'சண்டித்தனம்' மாத்திரமே மேலோங்கி நின்றது. தவிரவும் அமெரிக்கா தனது புலனாய்வு வல்லமையை தெட்டத் தெளிவாக நிரூபித்தது. 

ஈரானின் 'அல் குட்ஸ் சிறப்புப் படையணி' தளபதி ஜெனரல் ஹாசிம் சுலைமானி 2020 ஜனவரி 03 அன்று ஈராக்கின் பக்தாத் விமானத் தளத்திலிருந்து வாகனமூடாக வெளியேறுகையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தினூடான உரொக்கட் தாக்குதலில் கொல்லப்பட்டார். இது ஈரானின் முக்கிய இராணுவ வள இழப்பு. ஈரானின் ஜனாதிபதியாக பலர் வரலாம். அது தேர்தலூடாக இடம்பெறுவது. ஆனால் போரியல் நுணுக்கமுள்ள இராணுவ அனுபவமுள்ளவர்களை இழப்பது அவசரமாக ஈடுசெய்ய இயலாதது. 
இவ்விடத்தே காணவேண்டிய சில முக்கிய செய்திகளாவன.

1. ஜெனரல் ஹாசிம் சுலைமானி கொல்லப்பட்டது ஈரானிற்கான உளவியல் அடி. 

2. இனி ஈரானில் தலைமை வகிக்கும் எத்தளபதிகளும் அமெரிக்காவுடனான பகைப்பில் தடுமாறும் நிலை.

3. பெருந்தளபதி ஒருவரை இத்தனை துல்லியமாக இலக்கு வைக்கும் அளவிற்கு அமெரிக்கா அல்லது இஸ்ரேலிய புலனாய்வு வல்லமை.

ஆகவே ஹாசிம் சுலைமானி மீதான குழுவினர்கள் பலியானமை ஈரானுக்கு அச்சத்தையும், அமெரிக்காவிற்கு துணிச்சலையும் கொடுத்தது எனலாம்.

மறுபுறம் இதற்குப் பதிலடியாக ஈரான் நடாத்திய ஏவுகணைத் தாக்குதல். 2020 ஜனவரி 08இல் ஹாசிம் சுலைமானியின் இறுதி வணக்க நிகழ்வு முடிந்த பின்னே, அமெரிக்கப் படையினர் நிலைகொண்டிருந்த ஈராக்கில் அமைந்துள்ள அன் அல் ஆசாத் விமானத்தளம் மீது ஈரான் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியது. இது ஈரானின் துணிச்சல் என்று சொல்வதை விடவும், தன்னை நிரூபிக்கவும் மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கவுமான ஒரு தாக்குதல் எனலாம். ஈரான்கூட இதுபற்றி வீம்பாகப் பேசாமல் ஐ.நா.சாசனப்படியான தற்பாதுகாப்பு நடவடிக்கை என்றது. ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி பக்குவமாகவே அறிக்கையிட்டார். அதைவிட இப்படியான கணக்கற்ற ஏவுகணைளை வீசுவதிலும் புலனாய்வு சார் நுணுக்கங்களுடன் அமெரிக்காவின் முக்கிய நபர்கள் மீது அல்லது தெளிந்த இலக்குமீது தாக்குதல் நடாத்தியிருப்பின் அதுவே இராணுவ வளர்ச்சியின் குறியீடாகும். தவிரவும், தமது ஈராக்கிய இலக்குகள் மீதான தாக்குதலை அமெரிக்கா எதிர்பார்த்ததுதான். இராணுவ உச்சம் பெற்ற ஒரு வல்லரசு ஏவுகணைகள் புறப்படும்போதே அது பற்றிய எச்சரிக்கை கொண்டிராதா? கழுகுப் பார்வைகொண்டு சுற்றித்திரியும் அமெரிக்க செய்மதிகளும், இஸ்ரேலிய  மொசாட்டும் இத்தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிய வாய்ப்பு இருந்துள்ளதால் அமெரிக்க துருப்புகள் தற்பாதுகாப்பு கொண்டிருக்கவே வாய்ப்புகள் அதிகம். இதைவிட ஈரான் ஏவிய அத்தனை ஏவுகணைகளையும் ஒருசேரப் பொருத்தினால் வரும் வலுவிலும் அதிக வலுகொண்ட தனி ஏவுகணைகள் அமெரிக்கா வசமுள்ளன. ஆயினும் அமெரிக்கா பதிலடியைத் தவிர்த்தது.

இதனிடையே 'பட்ட காலிலே படும்' என்பதாய் ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து உக்ரைனுக்கு கிளம்பிய 'போயிங் 737' இரக விமானம் விழுந்து நொறுங்கி 180 வரையான மக்கள் பலியாகினர். இவர்களில் 80 பேர்கள் ஈரானியர்கள். ஜெனரல் ஹாசீம் சுலைமானியின் இறுதி வணக்க நிகழ்வின் நெரிசலில் 50 வரையான ஈரானியர்கள் பலியானதாக செய்திகள் வெளியாகின. ஆக ஈரானுக்குள் எதிர்பாரா மரண ஓலங்கள்.  வல்லரசு ஒன்றோடு ஊடகங்கள் எழுதுவது போல பொங்கி எழுந்து யுத்தம் தொடங்க முடியாது. அதுவும் அமெரிக்கா என்றால் அரபுலகில் போரிடும் அந்தத் தேசம் மட்டுமே மாட்டிக்கொள்ளும். மற்றவர்கள் வாய் திறவார்கள். ஈராக் மீதான போரிலும் இதுவே நடந்தது.   

1967இல்  எகிப்து, சிரியா, யோர்தான் சேனைகளோடு ஈராக், சவூதி அரேபியா, பலஸ்தீனம் உள்ளிட்ட பத்து நாடுகளின் துணையோடு இஸ்ரேலை துவம்சம் செய்யப் புறப்பட்ட அரபுலகை இஸ்ரேல் தனியாக சமாளித்தது. அத்தனை தேசங்களும் இஸ்ரேலிடம் மண்டியிட்டன. அப்போதே இஸ்ரேலிடம் அப்படியான வலிமை இருந்துள்ளது. இப்போது அதன் நுட்பம் வேறு வகை.  அமெரிக்காவுக்கு எதிரான யுத்தம் என்பது இஸ்ரேலுக்கும் எதிரான யுத்தமே. ஆக ஈரான் பெருயுத்தத்தை சண்டித்தனமாக ஆரம்பிக்க விரும்பவில்லை. ஈரான் மக்களும் அதற்கு ஆயத்தமில்லை. விருப்புமில்லை.
அமெரிக்க பட்டியலில் ஈரானை விழவைப்பது உள்ளது. ஆனால் அதனை உடனடி பெரு யுத்தமாக மாற்ற டொனால்ட் ட்ரம்ப் விரும்பமாட்டார். 2016 நவம்பரில் ஜனாதிபதியான ட்ரம்ப் 2020இல் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை சந்திக்கவுள்ளார். யுத்தமொன்றுக்கு ஓராண்டுக்கு மேற்பட்ட நீட்சி தேவை. எனவே மத்திய கிழக்கில் ஈராக்கினை விட வலிமையான தேசமொன்றோடு மோதுவதற்கு அமெரிக்காவைப் பொருத்தவரை இது உகந்த சூழல் அல்ல. திருமண நாளில் ஒரு வீட்டார் இன்னுமொரு நிகழ்வை நினைக்கவே மாட்டார்கள். அதற்கொத்ததே இது. அமெரிக்கத் தேர்தல் பரபரப்பு தொடங்கும் நிலையில் டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சியும் இதனை அவ்வளவு எளிதாக விரும்பாது. செப்டெம்பர் 11 போன்ற நெருக்கடி நிலை ஈரானூடு வராததால் பெரும்பான்மை அமெரிக்கர்களும் ஈரான் போரில் ஆசை கொண்டாரில்லை. எனவே ட்ரம்ப் தனது ஊடக சந்திப்பை கெளரவம் குறையாதபடியும், யுத்தத் தவிர்ப்பை பக்குவமாகவும் விளக்கினார்.

ஆகவே, ஈரானுக்கு 'மக்கள் அமைதி' தேவையும், அமெரிக்காவுக்கு 'மக்கள் அனுமதி' தேவையும் உள்ளது. இதனால் ஈரான் அமெரிக்கா பெருயுத்த வாய்ப்பு தவிர்ப்பாகி இருக்கலாம். ஆனால் இதனைக் கடந்து யுத்தமே வேண்டும் என ஈரான் அமெரிக்கத் தலைவர்கள் அத்தனை இலகுவில் முடிவெடுக்க முடியாது.

நன்றி..

Monday, 6 January 2020

ஆஸ்திரேலிய காட்டுத்தீ

இயற்கையின் விதியோ
இல்லை
செயற்கையின் சதியோ..

எதுவாகினும் இறந்துவிட்டன
எத்தனையோ உயிர்கள்



ஆஸ்திரேலியாவின் பல்லுயிர் ஆர்வலரும் சிட்னி பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியருமான கிறிஸ் டிக்மேன் நேற்று ஒரு மனதை உறைய வைக்கும் அறிக்கையை வெளியிட்டார் அதில் அவர் கூறியது :

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் காடுகள் அழிக்கப்படுவதால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து 2007ஆம் ஆண்டு இயற்கைக்கான உலகளாவிய நிதியத்துக்காக (WWF) தான் மற்ற ஆய்வாளர்களுடன் இணைந்து எழுதிய அறிக்கைதின் கணக்கெடுப்புப்படி கடந்த முன்று மாதங்களாக பரவிவரும் காட்டுத்தீயில் இதுவரை 50 கோடி உயிரினங்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளார்...


துல்லியமாக எப்படி 50 கோடி என்கிறீரகள் என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார்

ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 17.5 பாலூட்டிகள், 20.7 பறவைகள், 129.5 ஊர்வன ஆகியவை வாழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையின் தரவை தற்போது காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பரப்புக்கு கணக்கீடு செய்வதன் மூலம் இந்த எண்ணிக்கை கிடைத்துள்ளதாக கிறிஸ் கூறுகிறார்.

பெரிய விலங்கினங்களான கங்காரு, ஈமு மற்றும் பல்வேறு வகையான பறவைகள் ஆகியவை தங்களை நோக்கி தீ வருவதை பார்த்து சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றிருக்கக் கூடும்

ஆனால் அதிக தூரம் இடம்பெயர முடியாத மற்றும் காடுகளை மட்டுமே சார்ந்து வாழும் சிறிய உயிரிகள் மற்றும் ஊர்வன வகை உயிரினங்கள் இந்த காட்டுத்தீயில் சிக்கி என்ன ஆகியிருக்கும் என்று நான் அஞ்சுகிறேன்."

இந்நிலையில், ஆஸ்திரேலியா முழுவதும் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயில் தப்பிய பெரும்பாலான விலங்குகள் போதிய இடம், உணவு இல்லாமல் உயிரிழக்கக் கூடும் என்று அவர் எச்சரிக்கிறார்.

இந்நிலையில் சின வனவிலங்கு ஆர்வலர்களின் அறிக்கைகளும் புகைப்படங்களும் நெஞ்சை உறைய வைக்கின்றன..


இந்த இயற்கை அன்னை சகல உயிர்களுக்குமான தேவையை தந்துவிடுகிறாள்
ஆனால்
இந்த மனிதனின் பேராசைக்கு தரமுடியாமல தவிக்கிறாள்

அப்படி மனிதனின் ஆக்கிரமிப்பு பேராசையால் முன்பு அமேசான் போல தற்போது ஆஸ்திரேலியக் காடுகள தீக்கிரையாகின்றன..

யாரோ சிலரின் சுய லாபத்துக்காக இப்படி சூறையாடப்படும் காடுகளும் அதைச் சார்ந்து வாழும் பழங்குடி மக்களும் பழம்பெரும் உயிரினங்களின் வாழ்வாதாரம் இனி கேள்விக்குறிதான்..

காட்டுத்தீ பற்றி கத்திக் கதைப்போர் மத்தியில்
அந்த தீ பற்றியது எப்படி.?
பரவியது எப்படி.?
யார் அறிவார்..??

தீயில் சிக்கிய உயிரகளை போராடி மீட்டுவரும் தீனணைப்பு வீரர்களுக்கும் தன்னார்வலர் மீட்புப்பணி குழுவுக்கும் எம் நன்றிகள்

Sunday, 5 January 2020

Who Will Cry When You Die.? Book Review

ஒரு புத்தகத்த மனிதனா பிறந்த ஒவ்வொருத்தனும் வாசிக்கனும்னா அது இந்த புத்தகமா தான் இருக்கும்.. 
கண்டிப்பா எனக்கு தெரிஞ்ச எல்லாருக்கும் இந்த புத்தகம் வாங்கி படிக்க சொல்லுவேன். 
"WHO WILL CRY WHEN YOU DIE..?"
 by ROBIN SHARMA
இத தமிழ்ல சொன்ன 
"நீ செத்தா யாரு அழுக போறா.??" 
என்னடா இது தலைப்பே ஒரு நெகட்டிவிட்டி குடுக்குதுனு பாக்குறீங்களா… ஆனா நூறு சதவிகிதம் பாசிட்டிவிட்டி கருத்துக்கள அள்ளி குடுக்குற புத்தகம்.

ஒரு மனிதன் இதுவரை பயணித்த அவனோட வாழ்க்கையை அவனது அன்றாட சில பழக்க வழக்கங்களை மாற்றி அமைப்பதன் மூலம் இதுவரை கிடைத்த சந்தோசத்தை விட பல மடங்கு சந்தோசமாக வாழலாம் என்கிறார் இந்த எழுத்தாளர் ராபின் ஷர்மா..
அப்படி என்ன புது வழிய சொல்லபோறார் இவர்னு பாத்தா இது புதுசெல்லாம் இல்ல எப்பவுமே ஒரு மனுஷன் தன்னோட தப்ப உணரும் போதோ, இல்ல கொஞ்சம் நடைமுறை வாழ்க்கைய பத்தி யோசிக்கும் போதோ  மற்றும் அன்றாடம் செய்யுற சில சின்ன சின்ன விஷயங்கள் தான் அந்த வழிகள். 
உதாரணமா... ச்ச்சே இன்னிக்கு காலைல சீக்கிரம் எழுந்திரிச்சிருக்கலாம்.. அவருகிட்ட உண்மையா சொல்லிருக்கலாம், இன்னிக்கு பசங்கள வெளில கூட்டிட்டு போறோம்னு சொன்னோமே ஆனா டைம் இல்லையே.அந்த மேனேசர்கிட்ட கொஞசம் அமைதியா பேசிருக்கலாம். இப்புடி நமக்கு நாமே பேசிக்கிற கேட்டுக்குற விஷயங்கள தான் அவரு இந்த புத்தகத்துல சொல்லிருக்காரு..

தமிழ்ல ரஜினி நடிச்ச  பேட்ட படத்துல இளமை திரும்புதே பாட்டுல வர்ற ஒரு வரி "வாழ்க்கையே வாழத்தானே" அப்டிங்குற ஒரு பெரிய சித்தாந்த கருத்த 220 பக்கம் உள்ள புத்தகத்தில சொல்லிட்டாப்ள.. 
இந்த புத்தகத்துல அவரு வாழ்க்கையை  இப்படித்தான் வாழனும்னு சொல்லல மாறாக இப்டி வாழ்ந்து பாருங்க லைப் ஜாலியா இருக்கும்னு சொல்றாரு

இந்த புத்தகத்துல எழுத்தாளர் ராபின் சர்மா சந்தோசமா வாழ நூறு வழிமுறைகள் சொல்லிருக்காரு… அதுல எனக்கு பிடிச்ச சில முறைகள மட்டும் சொல்றேன் மீதி வழிமுறைகளை அந்த புத்தகம் வாங்கி படிச்சுக்கோங்க

1. நாம எல்லாரும் வழக்கமா பண்றது தான் “உங்களோட நீங்களே பேசிக்கிறது” மத்தவங்களோட அதிக நேரம் செலவு பண்றத விட்டுட்டு உங்களோ நீங்களே அதிக நேரம் செலவிடுங்க.. உங்களோட நீங்களே நெறைய பேசுங்க இது நமக்குள்ள இருக்குற சுயம் நீங்காம இருக்கும் அப்புறம் சுய கெளரவம் பெருகும்னு சொல்றாரு.

2. வேலை நேரத்துலயோ இல்ல குடும்பத்துடன் இருக்கும் போதோ  எதையாவது நினச்சு கவலைப்படாம… “கவலைப்படுறதுக்குனு தனியா ஒரு நேரம் ஒதுக்குங்க”. தினமும் ஒரு மணி நேரம் எடுத்துக்கிட்டு அந்த நேரத்துல உங்களோட கவலைகளை உங்களுக்குள்ளேயே பேசிக்கிட்டு அதுக்கான தீர்வு என்னே அப்டிங்கிறதையும் முடிவு பண்ணிட்டு அடுத்து போயி வேலைய பாருங்க.

3. பொய்கள் நிறைந்த இந்த உலகத்துல முடிஞ்ச அளவுக்கு உண்மையை மட்டும் பேசுங்க. அதாவது ஒரு வாரத்துக்கு உண்மை விரதம் இருந்து பாருங்க.

4. நேரத்தோட மதிப்பை தெரிஞ்சுக்க நேரம் தவறாம இருக்கணும்னு அவசியம் இல்ல.. நேரம் காலம் பாக்காம இருந்து பாருங்களேன் அதாவது ஒரு நாள் முழுக்க கடிகாரம் பாக்காம நேரம் தெரிஞ்சுகிறாம இருந்து பாருங்களேன்.

இந்த மாதிரி 100 விஷயங்கள் சொல்லிருக்காரு இதெல்லாம் நம்மளால செய்ய முடியுமான்னு கேக்காதீங்க கண்டிப்பா இந்த நூறு முறைகளும் நம்மால செய்ய முடியும்..

இப்போ இந்த புத்தகத்தோட தலைப்பை படிங்க

"WHO WILL CRY WHEN YOU DIE.?"
(Click this link to buy book Tamil edition)

"நீ செத்தா யாரு அழுக போறா.??"

அதனால இந்த உலகத்துல இன்னிக்கு தான் உன்னோட கடைசி நாள் அப்டினு நினச்சு ஒவ்வொரு நாளையும் ரசிச்சு வாழுங்கனு சொல்றாப்ல..!

இந்த புத்தகத்த படிச்சு முடிச்சதும் எனக்கு என்ன தோனுச்சுனா. "யார்ய்யா இந்த ராபின் சர்மா எனக்கே அந்தாள பாக்கனும் போல இருக்க"

நன்றி நல்வணக்கம்.
கௌதம் இளங்கோ