Saturday, 9 September 2017

முதல் இடை கடை சங்கங்களும் தமிழர்களும்...!

பழங்கால மரபிலக்கியப் படி, பாண்டிய மன்னர்கள் சங்கங்கள் தோற்றுவித்து தமிழ் மொழியை வளர்த்தார்கள். கூடவே, தமிழ் மொழி புலமையையும், தமிழ் மக்களின் வாழ்க்கை நெறிகளையும் போற்றினார்கள். பண்டைய தமிழர்களின் அக புற ஒழுக்கங்கள், அரசியல், வீரம், வழிபாடு, விழாக்கள், ஆடல், பாடல், ஓவியம், சிற்பம் போன்ற கலைகள் ஆகியவற்றிற்கு சான்றாக விளங்குவதே சங்க காலத்தில் இயற்றப்பட்ட பாடல்களே!
அச் சங்கங்களை மூன்று வகையாக தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என பிரித்தனர்.

அவ்வகை சங்கங்களைப் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் விரிவாக காண்போம்



#முதல்_தமிழ்ச்சங்கம்

(தலைச்சங்கம் அல்லது முதல் சங்கம்) கி.மு. 5000 – கி.மு. 3000 வரை.

பழம்பாண்டியமன்னனான “காய் சினவழதி” என்பவனால் முதல் சங்கம் நிறுவப்பட்டது.
பழம் பாண்டி நாட்டின் தலைநகராக குமரியாற்றங்கரையில் வீற்றிருந்த தென் மதுரையில் முதல் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழை ஆய்ந்தனர். மன்னன் காய்சினவழுதி முதல் முதலாம் கடுங்கோன் வரை, 89 பாண்டிய மன்னர்கள் அச்சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து தமிழை ஆய்தனர். அவர்களின் அகத்தியர் தலைசிறந்த புலவராய்த் திகழ்ந்தார் தென்மதுரையை தலைநகராகக் கொண்டு முதல் சங்கம் கி.மு. 5000 முதல் கி.மு. 3000 வரை ஏறக்குறைய 2000 ஆண்டுகள் சிறப்புடன் வளர்ச்சி பெற்று வந்துதது.

அக்காலத்தில் ஈழம் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. பக்றுளியாற்றிற்கும் குமரிக்கோட்டிற்கும் இடையே இருந்த பெரும் நிலப்பகுதியே பழம் பாண்டிய நாடு. இதன் தலைநகர் தென்மதுரை. ஏழுபனை நாடு, ஏழு தெங்கு நாடு, ஏழு முன்பாலைநாடு, ஏழு பின் பாலைநாடு, ஏழு மதுரை நாடு, ஈழநாடு, நாக நாடு, பெருவள நாடு, ஒளிநாடு போன்ற 49 நாடுகள், மலைகள், ஆறுகள், காடுகள் கொண்ட நாடு பாண்டிய நாடு என அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.

திடீரன நிகழ்ந்த கடற்கோளால் பக்றுளியாறும் பன்மலையடுக்கும், குமரியாறும், உரிக்கோடும், தென் மதுரையும் முதல் தமிழ்ச்சங்கமும் முழுமையாய் அழிந்து கடலுக்குணவாயின. தரைப்பகுதிகளாக இருந்த பாண்டிய நாடு அழிந்து இந்து மகா சமுத்திரமாக மாறியது. தலைச் சங்கமும் தலைச்சங்க நூல்களும் அழிந்தன. பாண்டி நாட்டுடன் பழமை வாய்ந்த லெமூரியாக் கண்டமும் அழிவுற்றது எனப் பேராசிரியர் ஹெக்கல் கூறுகிறார்.


சங்கத்தின் பெயர்: தலைச் சங்கம் அல்லது முதல் சங்கம்

நிறுவனர்: அகத்திய முனிவர்

தலைவர்: விரிசடைக் கடவுள்

அமைவிடம்: தென் மதுரை

தென் மதுரை பற்றிய ஒரு சிறு குறிப்பு: கடலுக்குள் மூழ்கி போன குமரி கண்டத்தில் (இலமோரியா கண்டம் ) அமையப் பெற்ற இந்த மாநகரம் தென் மதுரையானது, பாண்டிய அரசர்களின் முதல் தலை நகரம் ஆகும்.

தொடக்கம்: கி.மு. 9000 (நக்கீரரனாரால் கணிக்கப் பெற்றது)

ஆயுள் காலம்: 4400 ஆண்டுகள்

புலவர்களின் எண்ணிக்கை: 4449

பின்பற்றப்பட்ட இலக்கண நூல்: அகத்தியம்

படைக்கக்பெற்ற நூல்கள்: பரிபாடல், முதுநாரை’, முதுகுருகு, களரியாவிரை

ஆண்ட அரசர்கள்: 89 பேர்; ‘காய்சின வழுதி’ முதல் ‘கடுங்கோன்’ வரை

ஆறு: பஃறுளி ஆறு

மலைத் தொடர்: பன்மலை அடுக்கு

ஆதாரங்கள்: தலைச்சங்கம் பற்றிய ஆதாரங்கள் அனைத்தும் கி.மு. 2387 ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட கடற்கோளாறினால் அழிந்திருக்கும் என்பதே வருந்தத்தக்க செய்தியாகும். 


#இடைச்சங்கம் (இரண்டாம் தமிழ்ச்சங்கம்) 
கி.மு.9000 முதல் கி.மு 4600 வரை
முதல் சங்கமிருந்த தென்மதுரை அழிந்து போகவே மீண்டும் சங்கத்தை உருவாக்க எண்ணிய “பாண்டிய மன்னன் கடுங்கோன்” என்பவன் கபாடபுரத்தை அமைத்து அதில் இடைச்சங்கத்தை நிறுவி தமிழ் மொழியைப் போற்றி வளர்த்தான்.
இச்சங்கம் சுமார் கி.மு.4600 முதல் கி.மு 900 வரை ஏறக்குறைய 3700 ஆண்டுகள் நிலை பெற்றிருந்தது.

இச்சங்கத்தில் அவைப் புலவர்களாக தொல்காப்பியர், கீரந்தையர் போன்ற பெரும் புலவர்களும் வீற்றிருந்தனர்.
இவர்களுக்கு அகத்தியம், மாதிரி நூலாகத் துணைபுரிந்தது. வால்மீகி ராமாயணம், வியாச பாரதம் போன்றவைகளின் வாயிலாக கபாடபுரத்தைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது.

மேலும் கபாடபுரம் பாண்டியனின் தலைநகரமாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த துறைமுகமாகவும் திழ்ந்தது.

“இவ்வகை யரசிற் கவியரங்கேறினார்
ஐவகையரசர் ஆயிடைச் சங்கம்
விண்ணகம் பரவும் மேதகுகீர்த்திக்
கண்ணகல் பரப்பிற் கபாட புரமென்”
என்ற பழைய அகவற்பாவும் கபாடபுரத்தில் இடைச்சங்கம் இருந்த செய்தியை சுட்டிக் காட்டுகிறது.

இடைச்சங்க காலத்தில் பல இலக்கியங்களும், இலக்கண நூல்களும் வெளிவந்தன. அவைகள் பெருங்கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, இசை நுனுக்கம், தொல்காப்பியம் போன்றவைகளாம். இதில் தொல்காப்பியம் தலைசிறந்த நூலாகப் போற்றப்பட்டது.

கி.மு.900 அளவில் ஏற்பட்ட கடற்கோளானது கபாடபுரம் இருந்த பகுதி முழுவதையும் அழிந்து விட்டது. கடற்கோளால் பாண்டிய நாட்டையும், இரண்டாம் தமிழ்ச் சங்கத்தையும் இழந்ததோடு இடைச்சங்கம் இலக்கியங்களையும் இழக்க நேரிட்டது...!!


சங்கத்தின் பெயர்: இடைச் சங்கம்

அமைவிடம்: கபாடபுரம்

கபாடபுரம் பற்றிய ஒரு சிறு குறிப்பு : கபாடபுரம் பாண்டிய மன்னர்களின் இரண்டாவது தலை நகரம் ஆகும். இந்த நகரமும் கடலுக்குள் மூழ்கி போன குமரி கண்டத்திலே தான் அமைந்து இருந்தது.

தொடக்கம்: கி.மு. 4600 ( நக்கீரரனாரால் கணிக்கப் பெற்றது )

ஆயுள் காலம்: 3700 ஆண்டுகள்

புலவர்களின் எண்ணிக்கை: 3700

பின்பற்றப்பட்ட இலக்கண நூல்கள்: அகத்தியம், பூதப்புராணம், இசை நுணுக்கம், மாபுராணம், தொல்காப்பியம்.

படைக்கக்பெற்ற நூல்கள்: கலி, குருகு, வெண்டளை, வியாளமலை அகவல்.

ஆண்ட அரசர்கள்: 59 பேர் ; ‘வெண்தேர் செழியன்’ முதல் ‘முட்டதுத் திருமாறன்’ வரை

ஆதாரங்கள்:
இந்த சங்கம் இருந்தமைக்கு ஆதாரங்கள், வால்மீகி ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அர்த்தசாத்திரம் நூலில் கௌடில்ய மகரிஷியும் இதை பற்றி எழுதி உள்ளார். இச் சங்கம் மூன்றாம் கடற்கோளால் அழிந்தது. தொல்க்காப்பியத்தை தவிர ஏனைய நூல்கள் அனைத்தும் அழிந்தன.




#கடைச்சங்கம்

கடைச்சங்கம் அல்லது மூன்றாம் தமிழ்ச்சங்கம். கி.மு900முதல் கி.பி. 250 வரை

கபாடபுரம் அழிவுற்ற அதேவேளை இடைச்சங்கமும் சேர்ந்தே அழிவுற்றது. அழிவுற்ற பாண்டி நாட்டையும் தமிழ் சங்கத்தையும் மறுபடியும் உருவாக்க எண்ணிய “முட்டத்திருமாறன்” என்னும் பாண்டிய மன்னன் தன்னாட்டிற்குள் கூடல் என்னும் மதுரை மாநகரை உருவாக்கி மூன்றாம் தமிழ்ச் சங்கமான கடைச்சங்கத்தை நிறுவினான்.

இப்பொழுது உள்ள மதுரையில் கடைச்சங்கம் நிலைப்பெற்றிருந்தது என இறையனார் அகப்பொருளுரை கூறுகிறது.

இச்சங்கத்தைப்பற்றி செய்திகள் நமக்கு நிறையக் கிடைத்துள்ளன. கடைச்சங்கத்தில் 49 அவைப் புலவர்கள் தமிழாய்ந்துள்ளனர். அவர்கள் நக்கீரன், நல்லந்துவனார், சீத்தலைச்சாத்தனார் போன்றவர்கள் தலைசிறந்தவர்கள் ஆவார். கபிலர், பரணம் போன்ற பெரும்புலவர்களும் கடைச்சங்ககாலத்தவர்களே.இச்சங்கத்தில் தான் திருவள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றினார். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளும் இச்சங்கத்தின் இறுதிக் காலத்தில் வாழ்ந்தவரே. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கடைச்சங்கத்தில் இயற்றப்பட்டவைகளே.

கடைச் சங்கத்தின் சிறப்புகள்
பழைய திருவிளையாடற் புராணத்தின் வாயிலாக சங்கப் பலகை என்று ஒன்று இருந்த செய்திகளை அறியமுடிகிறது. “மொழியறி சங்கப் பலகை” என்றும் “பாவறி சங்கப்பலகை என்றும்” இருவகை சங்கப்பலகைகள் இருந்ததாக நமக்குத் தெரிவிக்கின்றது. பாடிக்கொண்டிருக்கும் பாடலை சங்க பலகை ஏற்றால்தான் புலவர் பெருமக்கள் அப்பாக்களைப் போற்றுவார்களாம்.

பிற்கால பாண்டிய மன்னன் ஒருவன் கடைச்சங்கத்திலிருந்த நாற்பத்தொன்பது புலவர்களின் உருவங்களை சிலைகளாகச் செய்து நிறுவினானாம். ஒரு சமயம் பொய்யாமொழிப் புலவர் அச்சிலைகள் முன் நின்று பாடினாராம். அவர் பாட்டைக் கேட்டு ரசித்த அப்பதுமைகள் தலையசைத்ததாகப் பழஞ்செய்தி கூறுகின்றது.

கடைச்சங்கத்தின் அழிவு:
சிறந்து விளங்கிய கடைச் சங்கமாது பாண்டிய மன்னன் உக்கிர பெருவழுதியின் காலத்திற்குப்பின் நில்லாது மறைந்தொழிந்தது. அவனுப்பின் வந்த பாண்டியர்கள் சங்கம் நிறுவாது, தமிழை வளர்க்காது போயினர். காரணம், அரசியல் குழப்பங்கள் பல நிகழ்ந்தன. களப்பியர்களின் படையெடுப்புகள், பல்லவர்களின் படையெடுப்புக்கள், பாண்டிய நாட்டில் பதிமூன்று ஆண்டுகள் கடும் பஞ்சம் காரணமாக சங்கப் புலவர்களைப் பாதுகாக்க முடியாமற்போகவே அவர்கள் சேர, சோழ நாடு நோக்கிச் சென்று விட்டனர். இச் சூழ்நிலையில் கி.பி.300 ஆம் ஆண்டுகளின் இறுதியில் சங்கம் அழிவுற்றது என இறையனார் அகப்பொருளுரை தெரிவிக்கிறது.


சங்கத்தின் பெயர்: கடைச்சங்கம் (அ) மூன்றாம் தமிழ்ச்சங்கம்.

நிறுவனர்: பாண்டியன் முட்டதுத் திருமாறன்

அமைவிடம்: மதுரை ( வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தற்போதைய மதுரை மாநகர் )

தொடக்கம்: கி.மு. 900 ( நக்கீரனாரால் கணிக்கப் பெற்றது )

ஆயுள் காலம்: 1150 ஆண்டுகள்

புலவர்களின் எண்ணிக்கை: 449

பின்பற்றப்பட்ட இலக்கண நூல்கள்: அகத்தியம், தொல்காப்பியம்

படைக்கக்பெற்ற நூல்கள்: குறுந்தொகை, நெடுந்தொகை, குறுந்தொகை நானூறு, நற்றினை நானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலி பரிபாடல், குத்து, வரி, சிற்றிசை, பேரிசை, திருக்குறள்

ஆண்ட அரசர்கள்: 49 பேர். ‘முட்டதுத் திருமாறன்’ முதல் ‘உக்கிர பெருவழுதி’ வரை.

முட்டதுத் திருமாறன் கபாடபுரம் விட்டு வெளியேறி மதுரையில் ஆட்சி அமைத்தான்.

ஆதாரங்கள்:
கடைச் சங்கத்தைப் பற்றி பத்தாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் செதுக்கப்பட்ட சின்னமனூர் கல்வெட்டு தான், தொல்லியல் துறைக்கு கிடைத்த முதல் ஆதாரம் ஆகும்.



#நான்காம்_தமிழ்ச்சங்கம்

முதல், இடை, கடையென்னும் முச்சங்கங்களும் அழிவுற்று சிதைந்தன. கடைச்சங்க பாண்டிய மன்னன் உக்கிர பெருவழுதிக்குப் பின் கி.பி. 250ல் கடைச்சங்கம் முழுமையாய்கச் செயல்இழந்து விட்டது. 

பண்டைய நாளில் தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சங்கத்திற்கும் இருந்து வந்த ஏற்றத்தையும், பின்நாளில் தமிழுக்கு ஏற்பட்ட தாழ்வையும் எண்ணி வருந்திய மதுரை கொடைவள்ளல்
திரு.பாண்டியத்துரைத் தேவர், மீண்டும் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் நிலை ஏற்றம் பெற்று, பண்டைய நிலைக்கு உயர வேண்டும் என்னும் பேரார்வப்பெருக்கால் சுமார் 1651 ஆண்டுகளுக்குப்பின் 1901 ஆம் ஆண்டில் மதுரை மாநகரில் சில தமிழறிஞர்கள் உதவியால் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார்..!

No comments:

Post a Comment